Jun 29

இஸ்ரேல் முன்னாள் பிரதமர் ஆல்மர்ட் சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை ஆகிறார்

ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் இஸ்ரேல் நாட்டின் முன்னாள் பிரதமர் ஆல்மர்ட் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேல் நாட்டின் மிகப்பெரிய ஊழல் வழக்குகளில் ஹோலிலேண்ட் ரியல் எஸ்டேட் ஊழல் வழக்கும் ஒன்று.

இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் பிரதமர் எகுத் ஆல்மர்ட்டுக்கு 19 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதேபோல் லஞ்ச வழக்கு ஒன்றில் 8 மாத சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. 

இந்த தண்டனைக் காலத்தில் 16 மாத தண்டனை அனுபவித்துள்ள ஆல்மர்ட், நன்னடத்தை காரணமாக தன்னை பரோலில் விடுதலை செய்யக்கோரி பரோல் கமிட்டியிடம் விண்ணப்பித்துள்ளார். அவரது விண்ணப்பம் மற்றும் தண்டனைக் காலத்தில் அவரது நடத்தைகளை ஆய்வு செய்த பரோல் கமிட்டி, அவரை பரோலில் விடுவிக்க முடிவு செய்துள்ளது.

இதுபற்றி ஆல்மர்ட்டின் வழக்கறிஞர் ஷானி இல்லூஸ் வானொலியில் பேசும்போது, ‘எங்கள் தரப்பு வாதங்களை பரோல் கமிட்டி ஏற்றுக்கொண்டது. எனவே, தற்போதைய நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை ஆல்மர்ட் விடுதலை செய்யப்படுவார். அதேசமயம், நீதித்துறையானது இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியும்’ என்றார்.

குற்றவாளி ஒருவர் தண்டனைக் காலத்தில் மூன்றில் இரண்டு பங்கினை அனுபவித்தால், நன்னடத்தையை கருத்தில் கொண்டு எஞ்சியுள்ள தண்டனைக் காலத்தை குறைக்க சட்டத்தில் இடம் உள்ளது. எனவே, ஆல்மர்ட் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட வாய்ப்பு உள்ளது.