Feb 11

நல்லிணக்கத்தினை வலியுறுத்தி மாற்றுத் திறனாளியின் பயணம் ஏறாவூரை சென்றடைந்தது


இன நல்லிணக்கத்தினை வலியுறுத்தியும் மாற்றுத் திறனாளிகளுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டுமெனவும்  ​கோரி நாட்டைச் சுற்றி 1400 கிலோ மீற்றர் தூரத்தினை சாதனைப் பயணமாகக் கொண்டு வலம்வரும் மாற்றுத் திறனாளி மொஹமட் அலி மட்டக்களப்பு ஏறாவூரை வந்தடைந்துள்ளார்.

இலங்கையின் 71வது சுதந்திர தினத்தினையொட்டி நாட்டில் உள்ள அனைத்து சமூகத்தவர்கள் மத்தியிலும் இன நல்லிணக்கத்தினை வலியுறுத்துவதோடு, மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலும் வவுனியாவைச் சேர்ந்த மக்கீன் மொஹமட் அலி என்னும் மாற்றுத் திறனாளி மாற்று வலுவுடையோர் வண்டியில் இலங்கை முழுவதும் தனது சாதனைப் பயணத்தினை ஆரம்பித்துள்ளார்.

கடந்த முதலாம் திகதி தனது பயணத்தினை யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பித்த இவர் கொழும்பு, புத்தளம், நீர்கொழும்பு, காலி, வெல்லவாய, திருக்கோவில், தம்பிலுவில், பொத்துவில், அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்கள் ஊடாகப் பயணித்து  ஏறாவூர் நகரினை வந்தடைந்தார்.

கொட்டும் மழையினைக் கூட பொருட்படுத்தாமல் அக்கரைப்பற்று நகரை வந்தடைந்த இவர், தன்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும், நாட்டில் நிலையான நல்லிணக்க சமாதானம் கட்டியெழுப்பப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி  இப் பயணத்தில் ஈடுபட்டிருப்பதாகக் கூறினார்.

ஏறாவூரை வந்தடைந்த இவருக்கு பொதுமக்கள் இளைஞர்கள் என பலர் திரண்டு மலர் மாலை அணிவித்து ஆரத் தழுவி பாரிய வரவேற்பினை வழங்கினார்கள்.