Feb 06

கறுப்பு நாளும் காணாமல் போன வெள்ளைச்சட்டைகளும்

சிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும் கறுப்பு நாளாக கடைப்பிடிக்க எடுத்துக்கொண்ட முயற்சியில் ஒரு உணர்வுபூர்வ அலை இருந்ததை காண முடிந்தது.தாயகத்தில் சகல மாவட்டங்களிலும் கறுப்புக்கொடி ஏந்தியும் அணிந்தும் மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் சிறீலங்காவின் சுதத்திர தினத்தில் தமிழர்களுக்கு இன்றைக்கும் சுதந்திரமில்லை என்ற சேதியை சொல்ல முயன்றுள்ளனர்.

குறிப்பாக எழுநூறு நாட்களை பெரும் இராணுவ வலையத்துள் இருந்து கொண்டு கேப்பாப்பிலவு மக்கள் தங்கள் காணிகளை விடுவிக்கக்கோரி நடத்திய நடத்துகின்ற போராட்டம் சுதந்திர தினத்தில் ஒரு பேரெழுச்சியை கண்டிருந்தது.தாயகத்தில் நடக்கின்ற உரிமையும் நீதியும் கேட்கின்ற தமிழர்களின் அனைத்துப்போராட்டங்களும் இராணுவ புலனாய்வு அச்சுறுத்தல் வலையமைப்பு கழுகுப்பார்வை என்பவற்றின் மத்திலேயே நடைபெற்றுவருகின்றது.ஒரு விடுதலைப்போராட்டம் என்பது விழவிழ எழுவதும் விழாமல் தொடர்வதும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அசையாமல் நிற்பதே உயர்வானது. அத்தகைய நிலையில் தாயகத்தில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

<div>சுதந்திதினத்தில் நடைபெற்ற கறுப்புக்கொடி போராட்டத்தில் எப்படி தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த பெரும்பாலான தரப்பு அதில் ஈடுபாடில்லாமல் இருந்ததோ அத்தகையதொரு சூழலை புலம் பெயர் தமிழர் வாழும் நிலங்களிலும் காணமுடிந்தது.தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் காலிமுகத்திடலில் காலுக்கு மேல் போட்டு அமர்ந்து கொண்டு தமிழர்களை பொன்றொழிக்க ஈடுபட்ட படையினரின் அணிவகுப்பையும் படைத்தளபாடங்களையும் போர் விமான சாகசங்களையும் ரசித்துக்கொண்டிருந்ததும்.;தாயகத்தில் அச்சுறுத்தல் வாழமுடியாது எனும் பெயரில் புலம்பெயர் மண்ணில் அகதி அந்தஸ்தை பெற்று வாழ்கின்றவர்கள் சுதந்திர தினத்தில் கறுப்புக்கொடிகளுடன் அந்தந்த நாடுகளில் பல்லாயிரக்கணக்கில் திரளாததும் ஒரே தட்டில் வைத்து பார்க்கக்கூடிய விடயமே.ஏனெனில் ஈழத்தில் போர். போரின் பின்னாகவும் அமைதியில்லை என்ற பின்னணியில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்களின் தொகை ஆயிரம் அல்ல லட்சத்தை தாண்டியது.ஆனால் தாயகத்தின் அமைதியை சுதந்திரத்தை உரிமை பெற்றுக்கொள்வதற்கான பெரும் கவனயீர்ப்புப் போராட்டங்களில் புலம்பெயர் தேசத்தில் சில இடங்களில் நூற்றுக்கணக்கிலும் சில இடங்களில் பத்து பதினைந்து கணக்கிலும் சில நாடுகளிலும் அதுவுமின்றி ஈழத்தமிழர்கள் இருப்பதன் அர்த்தம் என்ன என்பதையே கேட்கவைக்கின்றது.

கிட்டத்தட்ட புலம் பெயர் தமிழர்களால் உருவாக்கப்பட்டு தமிழ். தமிழ்த் தேசியம் தாயகம் சுதந்திரம் என்ற கோசங்களோடு இயங்கிவரும் அமைப்புக்கள் கறுப்பு நாள் போன்ற கவனயீர்ப்புக்களில் ஏன் கலந்துகொள்வதில்லை.கலந்துகொண்டால் தாயகத்தில் வாழும் தங்கள் உறவுகளுக்கு இராணுவத்தால் அச்சுறுத்தல் ஏற்பட்டுவிடும் என அஞ்சுகின்றார்களா.அவ்வாறு அஞ்சுவதற்கு இப்போது நியாயம் இருக்கின்றதா.ஏனெனில் இராணுவ வலயத்துள் குந்தி பெண்கள் தொடர்ந்து தாயகத்தில் போராட்டம் நடத்திவரும் நிலையில் புலம்பெயர் தமிழர்களின் இத்தகைய நொண்டிச்சாட்டு கேலிக்குரியதாகவே இருக்கும்.அவ்வாறெனில் விடுமுறை இல்லையா.ஒரு தாயகத்திற்காக ஒன்றாக புலம்பெயர் தமிழர்கள் திரள விரல்விட்டு எண்ணக்கூடிய சில சந்தர்ப்பங்களே உள்ள நிலையில் அவற்றையும் ஏதோ காரணத்தை கூறி தவறவிட்டால் தமிழினத்தின் போராட்ட பரிமாணத்தின் அர்த்தம் என்ன.புலம் பெயர் மக்களில் குறிப்பிட்ட சிலரும் சில அமைப்புக்களுமே தொடர்ந்து ராஜதந்திர போராட்டங்கள் முனைப்புக்கள் வேலைத்திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றது.ஏனையோர் எவ்வாறு தாயகத்தில் ஆயுதப்போராட்டத்தில் ஒரே குடும்பத்தில்இருந்து ஒன்றுக்கு மூன்று பேர் போராடி வீரச்சாவடைய எவருமே போராடாமல் குளிர்காய்கின்ற நிலை இருந்ததோ அது இன்றைக்கும் வேறு வடிவில் தொடர்கின்றது.

மாவீரர் நாளில் ஒரு பெருந்திரளான கூட்டத்தை புலம் தேசத்தில் ஒரே இடத்தில் காணமுடிகின்றது.வெள்ளை ஆடைகள் அணிந்தும் மஞ்சம் சிவப்பு சேலைகள் அணிந்தும் இன்னும் சீருடைகளோடும் வருவோரை மேய்ப்பதற்கும் ஒரு பெரும் அணியை காண முடிகின்றது.அது நல்ல விடயம்தான் மாவீரர் நாள் என்பது ஒரு இலட்சியத்துக்காக போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை ஒன்றுகூடி தமிழர்கள் நினைவு கூரும் தேசிய வடிவம் அதில் திரள்வது வரவேற்கத்தக்கது.ஆனால் அது போராட்டத்தின் தொடர்ச்சி அல்ல.போராட்டத்தின் தொடர்ச்சி என்பது மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக போராடினார்களோ அந்த இலட்சியத்தை அடைவதற்கான வடிவங்களில் திரள்வதே போராட்டம்.அத்தகையதொரு வடிவம்தான் சிறீலங்கா சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக கடைப்பிடித்து அதன் மூலம் தாயகத்தில் தமிழர்கள் உரிமைகள் இன்றி அடக்கு முறைக்குள்  வாழ்கின்றார்கள் என்ற சேதியை சொல்வது.அதில் தாயகத்தில் இருந்து 2009க்கு முன்னரும் பின்னரும் புலம்பெயர்ந்து வேறு நாடுகளுக்கு வந்தவர்கள் நாங்கள் தாயகத்தில் போராடிவிட்டோம் என்று பென்சன் கேட்கவும் முடியாது தாயகத்துக்கு நாம் அள்ளிக்கொடுத்துவிட்டோம் என்று காலாட்டவும் முடியாது ஏனெனில் விடுதலைப்போராட்டம் என்பது தொடர்ந்து போராடுவது.மாவீரர்நாள் கலாச்சார விழாக்கள் நினைவு நிகழ்வுகளில் மட்டும் திரண்டுவிட்டு நாம் போராடிக்கொண்டிருக்கின்றோம் என்று எவரேனும் நினைத்தால் நாம் எமது பலத்தை இழந்துகொண்டிருக்கின்றோம் என்பதே அர்த்தம்.

வெகுசனப்போராட்டங்களின் வெற்றி என்பது அதில் திரள்கின்ற மக்கள் தொகையினால் மதிப்பிடப்படுகின்றது.அந்த மக்கள் தொகை மூலம் சர்வதேசம் போராட்டக்காரர்களிடம் இருந்து வலிமையான ஒரு சேதியை பெற்றுக்கொள்ளும்.ஐந்துபேரும் பத்துபேரும் கறுப்புக்கொடியோடு தெருவில் நிற்க மற்றைய இலட்சம்பேர் அவரவர் சொந்த வேலையை பார்த்தால் எதுவும் இனத்துக்கு ஆகாது என்பதே உண்மை.