Jun 29

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்

டவுன்டானில் இன்று நடக்கும் 7-வது லீக்கில் இந்திய அணி, 20 ஓவர் கிரிக்கெட்டின் உலக சாம்பியனான வெஸ்ட் இண்டீசை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில் டவுன்டானில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் 7-வது லீக்கில் இந்திய அணி, 20 ஓவர் கிரிக்கெட்டின் உலக சாம்பியனான வெஸ்ட் இண்டீசை எதிர்கொள்கிறது.

மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்தை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த உலக கோப்பையை வெற்றியுடன் தொடங்கியது. தொடக்க வீராங்கனைகள் பூனம் ரவுத், மந்தனா, மிதாலி ராஜ் ஆகியோர் அரைசதம் விளாசி அமர்க்களப்படுத்தினர். வெற்றியால் கூடுதல் நம்பிக்கையை பெற்றுள்ள இந்திய வீராங்கனைகள் வெஸ்ட் இண்டீசுக்கும் ‘வேட்டு’ வைப்பார்களா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

ஸ்டெபானி டெய்லர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்தது. அந்த அணி சரிவில் இருந்து மீள கடுமையாக முயற்சிக்கும் என்பதால் இந்தியாவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை 21 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 17-ல் இந்தியாவும், 4-ல் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றுள்ளன.

இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: பூனம் ரவுத், மந்தனா, மிதாலி ராஜ் (கேப்டன்), ஹர்மன்பிரீத் கவுர், தீப்தி ஷர்மா, மேஷ்ரம், ஷிகா பான்டே, ஜூலன் கோஸ்வாமி, எக்கா பிஷ்ட், சுஷ்மா வர்மா, பூனம் யாதவ்.

வெஸ்ட் இண்டீஸ்: ஹாய்லே மேத்யூஸ், பெலிசியா வால்டர்ஸ், செடீன் நேசன், ஸ்டெபானி டெய்லர் (கேப்டன்), டோட்டின், மெரிசா அகுலெய்ரா, டாலே, அனிசா முகமது, பிளட்செர், ஷகிரா செல்மான், ஷமிலியா கனோல்.

இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்கி நடைபெறும்.