Jun 28

இரண்டாவது கருத்துக்கணிப்பு உடனடியாக நடத்தப்படாது: நிக்கோலா

முழுமையான பிரெக்சிற் விளைவுகள் தெளிவுபடுத்தப்படும் வரை பிரித்தானியாவிடம் இருந்து ஸ்கொட்லாந்து உடனடியாக சுதந்திரம் பெற வேண்டும் என்பது குறித்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட மாட்டாது என ஸ்கொட்லாந்து முதலமைச்சர் நிக்கோலா ஸ்ரேர்ஜன் தெரிவித்துள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் உரையாற்றுகையில், “ஸ்கொட்லாந்தின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது தொடர்பில் எமது அரசாங்கம் தீர்மானமாக உள்ளது. எனினும் இரண்டாவது கருத்துக்கணிப்பு உடனடியாக நடத்தப்படாது.

ஏனெனில் பிரெக்சிற் குறித்த விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டமையின் பின்னரே இரண்டாவது கருத்துக்கணிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும்” என தெரிவித்தார்.

பிரித்தானியாவிலிருந்து ஸ்கொட்லாந்து சுதந்திரம் பெற வேண்டும் என்பது தொடர்பில் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் அல்லது 2019 ஆம் ஆண்டில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட வேண்டும் என முன்னதாக நிக்கோலா கோரியிருந்தார். இருப்பினும் பிரெக்சிற் குறித்த விடயங்கள் பாரிய சவாலாக உருவெடுத்துள்ள நிலையில், கருத்துக்கணிப்பு குறித்து கலந்துரையாட இது சரியான தருணம் அல்ல என பிரதமர் மே தெரிவித்திருந்தார்.