Jun 28

உணவுக்கே வழியில்லை, பாடசாலை செல்வது எவ்வாறு? இடம்பெயர் முகாம் மக்களின் அவலம்!

எங்கள் சொந்த இடங்களில் நாங்கள் இருக்க வேண்டும். முகாமில் இருக்கிறதால் எங்கட பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கு. பிள்ளைகள் பள்ளிக்கூடத்துக்குப் போறதில் கூட சிக்கல் இருக்கிறது.

முகாமில் இருக்கிற பிள்ளைகள் என பிரித்துப் பார்க்கின்றனர். கெதியா எங்கட இடத்துக்குச் செல்ல வேண்டும் என்பது யாழ். மயிலிட்டியிலிருந்து பல வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்த வள்ளியம்மாவின் கருத்து.

வள்ளியம்மா போன்று நூற்றுக்கணக்கானவர்கள் தமது அபிலாஷைகளை அடக்கி வைத்தவர்களாகவும், உயிரை விடுவதற்கு முன்னர் தமது சொந்த இடங்களுக்குச் சென்று விடலாம் என்ற நம்பிக்கையைக் கொண்டவர்களாகவும் வாழ்ந்து வருகின்றனர்.

இடப்பெயர்வு என்றால் எமக்கு நினைவுக்கு வருவது வடக்கு, கிழக்கு மக்கள்தான்.யுத்தம், இயற்கை அனர்த்தம் என பலவற்றாலும் அடிக்கடி இடம்பெயர்ந்தவர்கள் வடக்கு, கிழக்கு வாழ் மக்கள்.

குறிப்பாக 30 வருடங்களுக்கு மேல் தொடர்ந்த யுத்தம் சிலரை நிரந்தரமாக தமது சொந்த இடங்களிலிருந்து பிரித்து வைத்து விட்டது.

மாறிமாறி ஆட்சிக்கு வருபவர்கள் இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்துவோம் என பல்வேறு உறுதிமொழிகளை வழங்கினாலும், அவர்களின் வாழ்க்கை என்னவோ இன்னமும் ‘இடம்பெயர்ந்தவர்கள்’ என்ற பெயருடனேயே தொடர்கிறது.

வடக்கு, கிழக்கு மாகாண மாவட்ட செயலக புள்ளி விபரங்களின் அடிப்படையில், சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்து இன்னமும் நலன்புரி முகாம்களிலும், உறவினர்கள் வீடுகளிலும் வசித்து வருகின்றார்கள்.

யாழ் மாவட்டத்தின் நலன்புரி முகாம்களில் வசிக்கும் மக்களின் நிலைமை பற்றி அறிவதற்கு நலன்புரி நிலையத்துக்கு நேரில் சென்றால் உண்மை நிலைமையை அறிந்து கொள்ளலாம்.

அங்கிருக்கின்ற மக்களின் எதிர்பார்ப்புகள் யாவும் ஒரேமாதிரியாகத்தான் இருக்கின்றன. முகாம் வாழ்க்கை போதும், சொந்த இடங்களுக்குச் சென்று நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே அவர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகும்.

இங்​கே எங்களுக்கு ஒரு துண்டு நிலம் கூட இல்லை. யாரோ ஒருவரின் காணியில் குடிசையைப் போட்டு இருக்கிறதால் காணி உரிமையாளர் தனது இடத்தை விடுமாறு சண்டைக்கு வாறார்.

நாங்க எங்கட பிள்ளைகளை கூட்டிக் கொண்டு எங்கதான் போறது? எனது மகளின் பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடத்துக்கு போக கூட முடியாது.பிள்ளைகளின் சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்படுறம்,

எப்பிடி பள்ளிக்கூடம் போய் படிக்கிறது? என்றார் பல வருடங்களுக்கு முன்னர் பலாலியிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையத்தில் வசித்து வரும் 82 வயது மூதாட்டி பொன்னம்மா.

அவர் தழுதழுத்த குரலில் கூறிய கருத்துக்கள் நெஞ்சை உருக்குவதாக இருந்தன.

சொந்த ஊருக்குப் போனா கூலி வேலை பார்த்து பிள்ளைகளை காப்பாத்துவம். எங்கட காலம் முடியப் போகுது.எங்கட பிள்ளைகள் சரி இனி நல்லா இருக்கட்டும் என்றால் அது கூட நடக்காது.

நான் சாகும் போது சரி என்ட சொந்த மண்ணில சாக வேணும்’ என்கிறார் அவர்.

யுத்தம் மாத்திரமன்றி, சுனாமி போன்ற இயற்கை அனர்த்தத்தால் இடம்பெயர்ந்து சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாத நிலையில் தமிழ் மக்கள் பலர் வடக்கு, கிழக்கில் இருக்கின்றனர்.

வட மாகாண மக்களின் காணிகள் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதுடன், கிழக்கு மாகாணத்தில் சுனாமி மற்றும் யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினர் பொதுமக்களின் காணிகள் பலவற்றிலிருந்து இன்னும் வெளியேறவில்லை.

வடமாகாணத்தின் யாழ்.மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் பலர் நலன்புரி முகாம்களில் வசித்து வருகின்றார்கள்.

இவ்வாறான வாழ்க்கையானது அவர்களுக்கு கசப்புணர்வுகளை வழங்குவதுடன், இந்த இடம்பெயர்ந்த வாழ்க்கையானது அவர்களின் உரிமைகள் பலவற்றையும் மறுக்கும் வகையில் அமைந்துள்ளது.

இடம்பெயர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்தால் நில உரிமை, கல்வி உரிமை, மத உரிமை உள்ளிட்ட உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் குரல் எழுப்பி வருகின்ற போதும் அவற்றை எவரும் காதில் வாங்கிக் கொள்வதாகத் தெரியவில்லை.

யுத்தம், சுனாமி மற்றும் இராணுவ நில ஆக்கிரமிப்பு காரணமாக மக்கள் தமது சொந்த நிலங்களை விட்டு வெளியேறி தமது உறவினர்கள் வீடுகளிலும், தரிசு நிலங்களிலும் குடிசைகளை போட்டு வாழ்க்கை நடாத்தி வருகின்றார்கள்.

நிலைமை வடக்கில் மாத்திரமன்றி கிழக்கிலும் தொடர்ந்தே வருகிறது.கிழக்கு மாகாணத்தின் கிண்ணியா பிரதேசத்திற்கு அண்மித்த கருமுலையூற்று என்ற கிராமம் உள்ளது. அங்கு முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்ந்து வருகின்றார்கள்.

கடந்த 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தின் போது அந்தப்பகுதியில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து சென்ற பின்னர், அக்கிராமத்துக் காணிகளை பாதுகாப்புப் படையினர் கையகப்படுத்தியுள்ளனர்.

எனக்கு இப்ப 63 வயது. என்னோட பாட்டன் பூட்டி வாழ்ந்த பாரம்பரிய கிராமம். எங்கட பூர்வீக காணிகளையே பறிச்சுப் போட்டு அந்த காணிகள் துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான காணி என்று சொல்றாங்க.

சுனாமியின் போது நாங்க எங்கட இடங்கள விட்டுப் போய் விட்டோம்.மறுகா வந்து பார்த்தா, எங்கட காணிகள இராணுவம் அபகரிச்சிட்டு, மற்ற பக்கம் பார்த்தா விமானப்படை எடுத்திட்டு.

நாங்க இப்ப வேறு காணிகள்ல இருக்குறோம். கடற்றொழில் தான் எங்கட வாழ்வாதார தொழில். நாங்க எங்கட தொழில கூட செய்ய முடியாம இருக்கு’ என்றார் அங்கு வசித்து வரும் பாத்திமா என்ற பெண்.

அதோட பார்த்திங்க என்டா, 4 பரம்பரைக்குரிய 400 வருட பாரம்பரியம் கொண்ட பள்ளிவாயல இராணும் இடிச்சுப் போட்டாங்க. நாங்க பல போராட்டங்கள செய்தப்ப, மலசலகூடம் கட்டுற மாதிரி சின்னதா எங்களுக்கு பள்ளிவாயல் என்டு கட்டித் தந்திருக்கிறாங்க.

நாங்க தொழுகைக்கு இங்க தான் வாறோம். மிகப் பெரிய பள்ளிவாசல் இருந்த இடம். எங்களுக்கு அதனைக் கொடுத்தா கட்டி இங்க தொழுகைய செய்வோம் என்றார் அவர்.

ஒருவர் தமது மதத்தை பின்பற்றுவதற்கும், அதனைக் கடைப்பிடிப்பதற்கும் காணப்படுகின்ற உரிமைகள் மீறப்படுவதை இங்கு எம்மால் அவதானிக்க முடிந்தது.

இடம்பெயர்ந்தவர்கள் என்ற காரணத்துக்காக அவர்களுடைய அடிப்படை உரிமைகள் மீறப்படுவது தொடர்ந்த வண்ணமே இருக்கிறது.

எங்கட பிள்ளைகளுக்கு கல்வி இல்ல, பள்ளிக்கூடம் ஒன்டு தற்காலி கொட்டில்லதான் இயங்குது. பிள்ளைகள் படிக்கிறாங்க. இப்பதான் புதுசா ஓரு பள்ளிக்கூடம் கட்டிட்டு இருக்கிறாங்க.

அந்த பள்ளிக்கூடம் திறந்த பிறகுதான் இனி எங்கட பிள்ளைகள் நல்ல படிப்பு படிக்க முடியும் என்கிறார் திருகோணமலை கருமலையூற்று சேர்ந்த பஸீர்.

எங்கட முப்பாட்டன் காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது, அன்பளிப்பாக கொடுத்த காணி இது. அதற்கான காகிதங்களும் எங்க கிட்ட இப்பவும் இருக்கு, அந்த காணியள கூட அரசாங்கம் தங்கட காணி என்டு சொல்றாங்க.

பாதுகாப்புப் படை காணிகளை தருவதாக இல்லை என்பது அவர்களுடைய அங்கலாய்ப்பாக இருந்தது. பிரிடிஷ் ஆட்சியின் போது வழங்கப்பட்டதாக கூறப்படும் காகிதங்கள் சிலவற்றையும் அவர்கள் எம்மிடம் காண்பித்தனர்.

கருமுலையூற்று (ஜும்மா பள்ளி வாசல்) கடந்த 2014 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் இடிக்கப்பட்டது.பள்ளிக்குரிய காணி விடுவிக்கப்படுவதாக இராணுவம் கூறிய போதும், இதுவரையில் அந்த மக்களுக்குரிய குடியிருப்பு காணிகள் கையளிப்பதற்கான எந்த வாக்குறுதிகளும் வழங்கப்படவில்லை.

மறுபக்கம் பள்ளிவாசலுக்குரிய காணியை சுவீகரிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர். மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் புராதன சின்னமாக விளங்கிய பள்ளிவாசல் இராணுவத்தினரால் இடிக்கப்பட்டது என்பது அக்கிராம மக்களின் விசனமாகும்.

இங்குள்ள ஏறத்தாழ 1000 குடும்பங்கள் கடற்றொழிலை நம்பி வாழ்க்கை நடத்துகின்றன. அந்த குடும்பங்களைச் சார்ந்த பிள்ளைகளின் கல்வி மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றது.

பாடசாலைகளுக்கான நிரந்தர ஏற்பாடுகள் எதுவும் இல்லாத சூழலில் தற்காலிக கட்டடத்தில் பாடசாலை இயங்கி வருகிறது. குவைத் அரசாங்கமும், இலங்கை அரசாங்கமும் இணைந்து ஒரு பள்ளிக்கூடத்தினைக் கட்டிக் கொண்டிருக்கின்றன.

இது போன்று பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வடக்கிலும், கிழக்கிலும் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றன.

எதிர்பார்ப்புகள் தொடர்ந்தும் ஏமாற்றம் தருவதாகவே அமைந்துள்ளன. காணி விடுவிப்பை வலியுறுத்தி வடக்கின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இருந்த போதும் அதற்கான சரியான சமிக்ஞைகள் அரசிடமிருந்து வரவில்லையென்பது துரதிர்ஷ்டவசமாகும்.

குறிப்பாக வடக்கில் யுத்த காலத்தில் வன்னிப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து குடாநாட்டில் வந்து வசிப்பவர்களை ஒதுக்கி வைத்துப் பார்க்கும் மனோநிலையொன்று காணப்படுகிறது.

இடம்பெயர்ந்தவர்கள் என்றால் சமூகத்தில் அவர்களும் பிரஜைகள் இல்லையா? அவர்கள் அந்நிய நாட்டைச் சேர்ந்தவர்களா?.

யுத்தம் காரணமாக தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறி வசிக்க வழியின்றி தற்காலிக கொட்டில்களிலும், உறவுகளின் வீடுகளிலும் தங்கியிருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி பல்வேறு உரிமைகளும் அவர்களுக்கு மறுக்கப்படுகின்றன.

இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி, சர்வதேச நியமங்களுக்கு அமைய இடம்பெயர்ந்த மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக உள்ளது.