Jun 28

யோர்க்டேல் பகுதியில் சனக்கூட்டம் நிறைந்த வர்த்தக வளாகத்தில் கத்திக்குத்து!

 யோர்க்டேல் பகுதியில் இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஆண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மிகவும் மக்கள் கூட்டம் நிறைந்த யோர்க்டேல் வர்த்தக வளாகத்தின் வடக்கு பகுதியில், நேற்று மாலை 5.30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதனை ரொரன்ரோ காவல்த்துறையினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அடி வயிற்றுப் பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்கான பதின்ம வயது ஆண், மிகவும் பாரதூரமான காயங்களுடன் காணப்பட்டதாகவும், உடனடியாகவே அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற பகுதியில் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்நத விசாரணை அதிகாரிகள் பிரசன்னமானதுடன், சந்தேக நபர்கள் குறித்த அந்த வர்த்தக வளாகத்தினுள்ளேயே இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் அதிகாரிகள் தேடுதல்களையும் மேற்கொண்ட போதிலும், அவர்கள் நால்வரும் TTC தொடரூந்து ஊடாக அங்கிருந்து தப்பித்துச் சென்றமை கண்காணிப்பு ஒளிப்பாதிவுகள் ஊடாக பின்னர் கண்டறியப்பட்டுள்ளது.

எனினும் எவரும் கைது செய்யப்படாத நிலையில், அவர்களைக் கண்டுபிடிப்பதற்கு காவல்த்துறையினர் பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளனர்.

சந்தேக நபர்களில் இருவர் கறுப்பு இன ஆண்கள் எனவும், பதின்ம வயது அல்லது 20 வயது மதிக்கத்தக்க அவர்களில் ஒருவர் சிவப்பு வெள்ளை நிறத்திலான மேலாடையும், நீலநிற காற்சட்டையும் அணிந்திருந்ததாகவும், மற்றையவர் கண்ணாடியும் சாம்பல் நிற குளிர் அங்கியும் அணிந்திருந்ததாகவும் காவல்த்துறையினர் அடையாளம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் ஒரு சந்தேக நபரான பெண் வெள்ளை இனத்தைச் சேர்ந்தவர் எனவும், மஞ்சள் நிறத்தில் தலையையும் மூடும் வகையிலான குளிர் அங்கி அணிந்திருந்த அவர், கறுப்பு மேற்சட்டையும், கறுப்பு காலணியும் அணிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

மற்றைய சந்தேக நபர் ஆசிய நாட்டவரை போன்ற வெள்ளை நிற ஆண் எனவும், தோள்மூட்டு வரையில் தலைமுடியினைக் கொண்டிருந்த அவர், தொப்பியும், நீலநிற குளிர் அங்கியும் அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த கத்திக் குத்துச் சம்பவத்துக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படாத போதிலும், இது ஒரு தனிப்பட்ட சம்பவமாகவே இருக்கும் என்று கருதுவதாக தெரிவித்துள்ள காவல்த்துறையினர், இந்த சம்பவத்தின்போது வேறு எவரும் காயமடையவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதுவேளை இந்த சம்பவத்தினை நேரில் கண்டோர், அல்லது மேலதிக தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் காவல்த்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.