Jun 27

ஒன்றிய பிரஜைகள் 2019 ஆம் ஆண்டிற்கு பிறகும் பிரித்தானியாவிலேயே வசிக்க வேண்டும்

பிரித்தானியாவில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டிற்கு பிறகும் பிரித்தானியாவிலேயே வசிக்க வேண்டும் என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

பிரெக்சிற்றின் பின்னர் பிரித்தானியாவில் உள்ள ஒன்றியப் பிரஜைகளின் நிலை தொடர்பில் நேற்று (திங்கட்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் உரையாற்றுகையில், “பிரித்தானியாவில் உள்ள ஒன்றிய பிரஜைகள் நாட்டின் வளர்ச்சியில் பாரிய பங்களிப்பு செய்கின்றனர். பொருளாதார, கலாச்சார மற்றும் சமூகம் சார்ந்த விடயங்களில் அவர்கள் முக்கிய புள்ளியாக கருதப்படுகின்றனர்.

அதனால் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் நான் தீவிரமாக உள்ளேன். 2019 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலகியமையின் பின்னரும் அவர்கள் பிரித்தானியாவிலேயே வசிக்க வேண்டும்” என தெரிவித்தார்.

அத்துடன், குறித்த விடயம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களிடம் இருந்து தான் சாதகமான பதில் ஒன்றை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேற்படி விடயங்களை கருத்திற் கொண்டு சிறந்த பிரெக்சிற் உடன்படிக்கை எட்டப்படும் எனவும் தெரேசா மே நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.