Mar 21

43ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வு

43ஆவது தேசிய விளையாட்டுவிழாவின் ஆரம்ப நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச விளையாட்டு விழா நிகழ்வுகள் திங்களன்று மாந்தை மேற்கு பிரதேச பொது விளையாட்டு அரங்கில் பிரதேச செயலாளர் எம்.ஸ்ரீஸ்கந்தகுமார் தலைமையில்  கோலாகலமாக இடம்பெற்றது.

நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் கலந்துகொண்டு விளையாட்டுவிழாவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.

இந்நிகழ்வின் சிறப்புவிருந்தினராக அடம்பன் மத்திய மகாவித்தியாலய அதிபர் எஸ்.எப்.சேவியரும் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் கணக்காளர், உதவித்திட்டமிடல் பணிப்பாளர், மன்னார் மாவட்ட விளையாட்டு அதிகாரி, முன்னாள் மாந்தை மேற்கு பிரதேச சபையின் செயலாளர் எஸ்.ஜெனிங்ஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

குறித்த விளையாட்டு நிகழ்வில் வடக்கு அமைச்சர் டெனிஸ்வரன் உரையாற்றுகையில், 

விளையாட்டு ஒரு மனிதனை தேக ஆரோக்கியமாகவும், மனதளவில் வலிமை சேர்த்து பூரணப்படுத்துகிறது, நம்முடைய தற்போதய இளைஞர்கள் விளையாடும் நேரத்தை தேவையற்ற வீண் பொழுதுகளாக கழிக்கிறதனால் எமது சமூகம் பாரிய பின்னடைவுகளை கண்டுகொண்டிருக்கிறதை நாம் பார்க்கமுடிகிறது,

அவ்வாறாக இளைஞர்கள் தமது ஓய்வு நேரத்தை இவ்வாறான பயன்தரும் விளையாட்டுக்களில் செலவழித்து தமக்கும் நாட்டிற்கும் உகந்தவர்களாக நடக்கவேண்டும் என்றும், அவ்வாறு அல்லாது ஓர் இழிவான நிலைக்கு செல்வோமானால் நமது இனம் இத்தனை நாளாய் இழந்த இழப்புக்களும், கொடுத்த விலைமதிப்பற்ற தியாகங்களும் அர்த்தமில்லாமல் போய்விடும் என்றார்.

மாந்தை மேற்கு பிரதேச செயலக விளையாட்டுத்துறைக்கு தமது 2017 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டில் ரூபாய் ஐம்பதுனாயிரம் தருவதாகவும் வாக்களித்ததுடன், விளையாட்டு விழாவை ஒழுங்குசெய்த பிரதேச செயலாளர் மற்றும் விளையாட்டு அதிகாரிகள் அதனோடு இணைந்த அனைத்து உத்தியோகத்தர்களையும் தாம் பாராட்டுவதாகவும் அமைச்சர் டெனிஸ்வரன் தெரிவித்தார்.

நிகழ்வின் நிறைவில் மன்னார் பிரதேச செயலக அணிக்கும் மாந்தை மேற்கு பிரதேச செயலக அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ உதைபந்தாட்ட போட்டியும் இடம்பெற்றது.