Jun 27

8 பேரை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் சிறைத் தண்டனை

8 முதியவர்களை கொலை செய்த முன்னாள் பெண் தாதி உத்தியோகத்தருக்கு, 25 ஆண்டுகளுக்கு சிறை விடுப்பில்கூட செல்லமுடியாத வகையிலான, ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஒன்ராறியோவின் தென்மேற்கே உள்ள வூட்ஸ்டொக் பகுதியைச் சேர்நத் முன்னாள் தாதியான 49 வயது எலிசபெத் வெட்லூஃபர் என்பவர் தனது சுமார் ஒரு தசாப்த சேவைக் காலத்தின் போது, தான் பணியாற்றிய முதியோர் இல்லத்தில் இருந்த பல முதியவர்களை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நீண்டகால வழக்கு விசாரணைகளின் பின்னர், எட்டு முதல்தர கொலைக் குற்றச்சாட்டுகளிலும், நான்கு கொலை முயற்சி குற்றச்சாட்டுகளிலும், இரண்டு மோசமான தாக்குதல் குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என நீதிமன்றால் அறிவிக்கப்பட்டார்.

கடந்த 2007ஆம் ஆண்டில் இருந்து 2016ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தான் பணியாற்றிய மூன்று தனியார் முதியோர் காப்பகங்களில் அவர் இந்த குற்றச் செயல்களை புரிந்துள்ளார்.

அனைத்து சம்பவங்களின் போதும் முதியவர்களுக்கு தேவைக்கும் மிக அதிகமான அளவில் இன்சுலின் ஊசி மருந்து தன்னால் செலுத்தப்பட்டது என்பதனை அவர் விசாரணைகளின் போது ஒப்புக்கொண்டுள்ளார்.

இவ்வாறான நிலையிலேயே குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட அவருக்கான தண்டனையை இன்று அறிவித்த நீதிபதி, இவர் புரிந்த குற்றம் மிகவும் மோசமான ஒரு நம்பிக்கைத் துரோகம் என்று தெரிவித்துள்ளார்.

ஏனையோரின் உடல் நலனைக் காத்து அவர்களின் ஆயுளை நீடிக்க வேணடிய பொறுப்பில் இருந்த ஒருவர், அதற்கு எதிர்மாறாக இப்படியான கொடும் குற்றத்தைப் புரிந்துள்ளதாக அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இவர் மேற்கொண்ட கொலைகளுக்காக இவருக்கு ஆயுள் தண்டனையை அறிவித்த நீதிபதி, இவர் மேற்கொண்ட ஏனைய குற்றச் செயல்களான 4 கொலை முயற்சிகளுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தாக்குதல் சம்பவங்களுக்காக 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்ததுடன், ஏக காலத்தில் இவற்றை அவர் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.