Mar 21

நாடாளவியரீதியில் 50 ச.தொ.ச விற்பனை நிலையங்கள் திறக்க ஏற்பாடு; அமைச்சர் ரிஷாட்

ஜனாதிபதி, பிரதமர், பங்கு பற்றுதலுடன் இம்மாதம் 28 ஆம் திகதி  நாடு முழுவதிலும் 50 சதொச விற்பனை நிலையங்களை திறந்து வைக்க கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கூட்டுறவுத்துறைக்கான கொள்கையைத் தயாரிக்கும் வகையிலான இறுதிக்கட்ட மாநாடு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதோடு மாகாண கூட்டுறவு அமைச்சர்கள், மாகாண கூட்டுறவு ஆணையாளர்கள், கைத்தொழில் வர்த்தக அமைச்சின் செயலாளர் மேலதிகச் செயலாளர், கூட்டுறவுத்துறை உயரதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேலும் கூறுகையில்,  இந்த வருட இறுதிக்குள் 500 சதொச விற்பனை நிலையங்கள் திறந்து வைக்கும் அரசின் இலக்கு நிறைவு பெற்ற பின்னர் சதொச கிளைகள் திறந்து வைக்கப்படுவதை நிறுத்தி அங்கீகரிக்கும் முகவர்கள் ஊடாக ச.தொ.ச.வுடன் இணைந்து நாடு முழுவதிலும் அத்தியாவசியப் பொருட்களை ஒரே விலையிலும் மற்றும் சாதாரண விலையிலும் நுகர்வோருக்கு வழங்க நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

ச.தொ.ச நிறுவனத்தை இன்னும் 2 மாதங்களுக்குள் முழுமையாக கணிணி மயப்படுத்தி வர்த்தகக் கொடுக்கல் வாங்கல்களையும் நிர்வாகத்தையும் இலகுபடுத்துவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நஷ்டத்தில் தொடர்ந்து இயங்கி வரும் கூட்டுறவுத்துறைக்கு புத்துயிரூட்டும் வகையிலேயே அதற்கான கொள்கையொன்றை உருவாக்கும் முயற்சிகள் தற்போது இறுதிக்கட்டத்திற்கு வந்தாலும் மாகாண அமைச்சர்கள் மாகாண ஆணையாளர்கள் ஆகியோரின் கருத்துக்களுடன் நாடு முழுவதிலுமுள்ள கூட்டுறவு அங்கத்தவர்களின் நன்மைகளையும் கருத்தில் கேட்டு ஒரு தீர்க்கமான கொள்கையொன்றை உருவாக்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன.

அந்த வகையில் இந்தக் கொள்கையை முழுமைப்படுத்தி முறையான வடிவமாக கொண்டு வருவதற்கு உங்களுக்கு கால அவகாசம் வழங்குவதோடு தேவையேற்படின் இன்னுமொரு கலந்துரையாடலை மேற்கொண்டு இறுதி வடிவம் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.