Jun 26

மக்கள் பேரணியில் கனேடிய பிரதமர்

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் ரொரன்ரொ “பிரைட் பரேட்” பேரணியில் பிரதமர் ஜஸ்டின் ரூடோ உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளனர்.

பிரதமர் ஜஸ்டின் ரூடோ, அவரது பாரியார் ஸோஃபி ரூடோ, ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் உட்பட, மேலும் பெருமளவானோர், ஆண்டுதோறும் இடம்பெறும் இந்த பேரணியில் தமது பங்களிப்பினையும் பதிவு செய்துள்ளனர்.

யங் வீதி நெடுகிலும் இரு மருங்கிலும் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மத்தியில் நகர்ந்த இந்த பேரணியில், பிரதமரும் தனது முகத்தில் வாணவில் வர்ண கொடியினை வரைந்தவாறு, இளஞ்சிவப்பு சட்டையுடன் வலம் வந்தமை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதன் போது ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட பிரதமர் ஜஸ்டின் ரூடோ, நாட்டின் வெவ்வேறு விதமான மக்கள் அனைவரதும் அடையாளங்களை நாம் அனைவரும் இணைந்து கொண்டாடும் இந்த நிகழ்வு, கனடாவை மேலும் வலிமையாக்குகிறது என்று தெரிவித்துள்ளார்.