Jun 26

பிரிட்டிஸ் கொலம்பிய அரசுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்!

பிரிட்டிஸ் கொலம்பிய மாநிலத்தின் லிபரல் அரசாங்கத்துக்கு எதிராக இன்று திங்கட்கிழமை நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.

அண்மையில் நடைபெற்றுமுடிந்த மாநிலத் தேர்தலில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறிய லிபலர் கட்சி, 43 ஆசனங்களுட்ன ஆட்சியை அமைத்துள்ளது.

தேர்தல் முடிவடைந்து ஆட்சி அமைக்கப்பட்டு, அமைச்சுக்கள் பொறுப்பேற்கப்பட்டதன் பின்னர், கடந்த 22ஆம் நாள் இடம்பெற்ற முதலாவது சட்டமன்ற அமர்வில் முதலாவது உரையினை ஆற்றிய முதல்வர் கிறிஸ்டி கிளார்க் பல்வேறு வாக்குறுதிகளை தனது உரையின் போது முன்வைத்துள்ளார்.

இதுவரைகாலமும் எதிர்த்துவந்த பல்வேறு கருத்துக்களுக்கு மாறாகவும், புதிய சனநாயக கட்சி மற்றும் பசுமைக் கட்சி ஆகியவை தேர்தலின் போது முன்வைத்த வாக்குறுதிகளை அடியொற்றியுமே, முதல்வர் தனது உரையின் போது வாக்குறுத்திகளை வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டுக்ள முன்வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில், தமது அரசினை தக்கவைப்பதற்கான இறுதி முயற்சியாகவே முதல்வர் தமது அடிப்படைக் கொள்கைள் அனைத்துக்கும் மாறான வாக்குறுதிகளை இந்த உரையின்போது முன்வைத்துள்ளதாக புதிய சனநாயக கட்சி தெரிவித்துள்ளது.

இதேதேவேளை பசுமைக் கட்சியுடன் இணைந்து 44 ஆசனங்களுடன் ஆட்சியை அமைப்பதற்கான முனைப்பில் ஈடுபட்டுள்ள புதிய சனநாயகக் கட்சி, தற்போதய லிபரல் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை இன்று திங்கட்கிழமை அவையில் முன்வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

முதல்வரின் உரையின் மீதான திருத்த விவாதமாக முன்வைக்கப்படும் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம், இன்று முன்வைக்கப்படும் எனவும், நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கேடுப்பு நாளை இடம்பெறக்கூடும் என்றும் புதிய சனநாயக கட்சியின் அவைத் தலைவர் மைக் ஃபார்ன்வோர்த் தெரிவித்துள்ளார்.

குறித்த இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றியளிக்கும் எனில், கடந்த 16 ஆண்டு காலமாக பிரிட்டிஸ் கொலம்பியாவில் அதிகாரத்தில் இருந்த லிபரல் கட்சியின் ஆட்சி, அத்துடன் முடிவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.