Jun 26

ஜனநாயக ஒன்றியக் கட்சியை கூட்டிணைக்கும் நடவடிக்கைகள் சரியான பாதையில்: ப்ரீத்தி

கொன்சர்வேற்றிவ் கட்சியுடன் வடக்கு அயர்லாந்தின் ஜனநாயக ஒன்றியக் கட்சியை கூட்டிணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் சரியான பாதையில் கொண்டு செல்லப்படுகின்றது என சர்வதேச அபிவிருத்தி செயலாளர் ப்ரீத்தி பட்டேல் (Priti Patel) தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட செவ்வியொன்றிற்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் உரையாற்றுகையில், “ஜனநாயக ஒன்றியக் கட்சியுடன் உரையாடியதைத் தொடர்ந்து, கூட்டிணைப்பு தொடர்பான செயற்பாடுகள் சரியான பாதையில் முன்னெடுக்கப்படுகின்றது எனும் முடிவுக்கு வரலாம். அது தொடர்பான உடன்படிக்கை உரிய நேரத்தில் முன்வைக்கப்படும் என நான் நம்புகின்றேன்” என தெரிவித்தார்.

இம்மாத ஆரம்பத்தில் நடத்தப்பட்ட பிரித்தானிய தேர்தலில், ஆளும் கொன்சர்வேற்றிவ் கட்சி பெரும்பான்மை ஆசனங்களை பெறத் தவறியதைத் தொடர்ந்து, ஜனநாயக ஒன்றியக் கட்சியை கூட்டிணைத்து ஆட்சியைத் தொடர்வது குறித்து அக்கறை செலுத்தப்பட்டு வருகின்றது.