Jun 26

நோன்பு பெருநாளுக்கு சிரியாவுக்கு செல்ல துருக்கியில் உள்ள சிரியர்களுக்கு அனுமதி

உலகளாவிய ரீதியில் இன்று (திங்கட்கிழமை) முஸ்லிம்களின் நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில், துருக்கியில் உள்ள சிரிய மக்கள் தங்களது நாட்டிற்கு சென்று நோன்புப் பெருநாளை கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேற்படி அறிவித்தல் நேற்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சில சிரிய நாட்டு மக்கள் மீண்டும் சிரியாவுக்கே திரும்புவது தொடர்பில் அக்கறை காட்டி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த மக்கள், சிரியாவில் உள்ள பயங்கரவாதிகளிடம் இருந்து மீளக் கைப்பற்றப்பட்டுள்ள நகரங்களுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பொதுமக்களில் ஒருவர், “நான் சிரியாவுக்கு சென்று நோன்புப் பெருநாளைக் கொண்டாட விரும்புகின்றேன். இதன் பொருட்டு நான் இரவு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன். நான் சிரியாவுக்கு சென்று தற்போது மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன” என தெரிவித்தார்.

யுத்தம் காரணமாக துருக்கியில் இருப்பிடம் பெற்றுள்ள சிரியர்களுக்கு பிறந்த சுமார் 170,000 குழந்தைகள், சிரியாவை இதுநாள் வரை கண்ணால் கூட பார்த்தில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செல்லுபடியாகும் பயண ஆவணங்களை வைத்துள்ள சிரியர்கள், எதிர்வரும் ஜூலை மாத நடுப்பகுதி வரை சிரியாவுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர் என துருக்கி அரசாங்கம் அறிவித்துள்ளது.