Jan 13

ட்ரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகளினால் அதிரும் அமெரிக்க அரசியல்!

அமெரிக்கா – மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர் அமைக்க ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் அனுமதியளிக்கும் என ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


மேலும், காங்கிரஸ் இந்தச் செயற்பாட்டை மேற்கொள்ளாவிட்டால் அவசரக்கால நிலையை அறிவிக்கத் தயங்க மாட்டேன் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா – மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர் அமைப்பதற்கு ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் நிதியொதுக்கீடு செய்யவில்லை என்றால், நாட்டில் அவசரக்கால நிலையை அறிவிப்பேன் என்று அண்மையில், ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

இந்தநிலையில், தற்போது அந்த நிலைப்பாட்டை சற்றுத் தளர்த்திக் கொண்டுள்ள ட்ரம்ப், எல்லைச் சுவர் அமைக்க காங்கிரஸ் ஒப்புதல் வழங்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அவசரக்கால நிலையை பிரகடனப்படுத்தும் உரிமை தனக்கு இருந்தால்கூட, நாட்டில் அதனை உடனடியாக அறிவிக்க மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், நாடாளுமன்றம் தனது வழக்கமான பணியை மேற்கொள்ளவேண்டும் என்பதே எங்களின் விருப்பம் என்றும் அதனால் துரிதமாக அவசர நிலை அறிவிப்பு என்னும் நிலைக்கு தான் போகப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது நிதியை பெறுவதற்கான எளிதான வழி என்றாலும் கூட அதை விரைவாக கையாள மாட்டேன். அதேநேரம், நாடாளுமன்றம் இதைச் செய்ய தவறும் பட்சத்தில் அவசர நிலை அறிவிக்கப்படும் என்கிற எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.