Jan 13

கூட்டணியமைக்க அ.தி.மு.கவை பா.ஜ.க மிரட்டுகின்றது – திருநாவுக்கரசர்

மக்களவைத் தேர்தலில் கூட்டணி வைக்கவேண்டும் என்பதற்காக அ.தி.மு.கவை பா.ஜ.க பல வகையில் மிரட்டி வருகின்றது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.


சென்னை இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மக்களவைத் தேர்தலுக்கு எல்லாவகையிலும் காங்கிரஸ் தயாராகி வருகின்றது. அதற்கென குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெறவுள்ளது. முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இதற்காக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் பங்கேற்க உள்ளார்.

தேர்தல் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பா.ஜ.கவுடன் தி.மு.க ஒரு போதும் கூட்டணி அமைக்காதென்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அ.தி.மு.கவுடன் பா.ஜ.க கூட்டணி அமைக்க முயற்சிக்கின்றது. இதற்காக, அ.தி.மு.கவை பலவகையிலும் மிரட்டி வருகின்றது. அமைச்சர்களின் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடத்தி அவர்களை மிரட்டி வருகின்றது.

கோடநாடு விவகாரம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் உண்மை நிலையை அறிய பணியிலுள்ள நீதிபதி தலைமையில் விசாரணைகளை நடத்த வேண்டும்” எனக் கூறினார்.