Jan 12

மலையகத்தின் புதிய பாடசாலைக்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும்

மலையகத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள மும்மொழி தேசிய பாடசாலைக்கான அடிக்கல் நாட்டு விழா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் விரைவில் நடத்தப்படும் என, அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா நானுஓயா பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய மும்மொழி தேசிய பாடசாலையை அமைப்பதற்கான பணிகளை அமைச்சர் மற்றும் ‘அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ வேலைத்திட்டத்தின் செயல்திட்ட பணிப்பாளர் பத்மன் தலைமையிலான கட்டட கலைஞர், பொறியிலாளர் ஆகியோர் இன்று (சனிக்கிழமை) பார்வையிட்டனர்.

இதனை தொடர்ந்து அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர், பாடசாலை அமைப்பதற்கான ஆரம்பகட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோரின் தலைமையில் விரைவில் அடிக்கல் நாட்டு விழா முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

இராதாகிருஷ்ணனின் வேண்டுக்கோளுக்கமைய மலையகத்தில் புதிய மும்மொழி தேசிய பாடசாலை அமைப்பதற்கு கடந்த ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டது.

அதன்படி, சுமார் 600 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இப்புதிய பாடசாலை அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.