Jan 12

தமிழ்மக்களின் மனங்களை ஆளுநர் ஹிஸ்புல்லா வென்றெடுக்க வேண்டும்! நக்கீரன்

சனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை  ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து விலகல் கடிதங்களை வாங்கிவிட்டு அவர்களது இடத்தில் புதியவர்களை நியமித்திருக்கிறார்.

ஆளுநர்களை நிமிப்பது, நீக்குவது போன்ற அதிகாரங்கள் சனாதிபதி கையிலேயே இருக்கிறது. இந்த ஆளுநர்கள் மாகாண சபைகளை ஆளுகின்ற சனாதிபதியின் முகவர்கள்.

சனாதிபதி நியமித்த ஒன்பது ஆளுநர்களில் ஒருவர் தமிழர், இருவர் முஸ்லிம், எஞ்சிய ஆறு பேரும் சிங்களவர்கள்.

ஒரு முஸ்லிமை ஆளுநராக நியமித்தால் தமிழர் ஒருவரை ஆளுநராக நியமிப்பதைத் தவிர்க்கலாம். ஆனால் இரண்டு முஸ்லிம்களை ஆளுநராக  நியமித்துவிட்டு ஒருவரையாவது தமிழர்களுக்குக்  கொடுக்காது விட்டால் அது கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகும். இது சனாதிபதி சிறிசேனாவுக்குத் தெரியும். அதன் காரணமாகவே முன்பின் அறிமுகம் இல்லாத ஒரு தமிழரான முனைவர் சுரேன் இராகவன்

அவர்களை வட மாகாண சபையின் ஆளுநராகக் கடந்த சனவரி 07 இல் ஆளுநராக நிமித்திருக்கிறார்.

இராகவன் என்ற பெயர் இந்துப் பெயர் இருந்தாலும்  அவர் ஒரு கிறித்தவர்.  சுமந்திரன் அயோத்தி அரசன் தசரனது அமைச்சர் ஆக இருந்தவர்.  இந்துப் பெயர்.  நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்  அவர்களும்  ஒரு கிறித்தவர்தான்.

தமிழ்மக்களைப் பொறுத்தளவில் அவர்களது  அடையாளம் மொழி. மதம் அல்ல.

முனைவர் இராகவன் மும்மொழிகளிலும் புலமை வாய்ந்தவர். சிங்களமொழிப் பள்ளிக்கூடத்தில் படித்த காரணத்தால் சிங்களம் அவருக்கு அத்துப்படி. உயர் வகுப்புகளில் ஆங்கிலத்தில் படித்ததால் அந்த மொழியிலும் பாண்டித்தியம்

.  தமிழ்மொழி தாய் மொழி என்பதால் அதிலும் புலமை பெற்றுள்ளார்.

முனைவர் சுரேன் இராகவன் யேம்ஸ் நினைவு கூட்டுறவு பரிசை இரண்டு முறை வாங்கிய முதல் ஆசியர் ஆவர். 2008 இல் கென்ட் பல்கலைக் கழகத்தில்  படித்து முனைவர் பட்டம் பெற்றவர். ஒன்ரோறியோ பல்கலைக் கழகத்தில் படிக்க ஒசாப் புலமைப் பரிசும் அதே போல் பிரித்தானிய அரசிடம் இருந்தும் புலமைப் பரிசு பெற்றவர்.

இருபதுக்கும்  மேலான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ள இவர் பவுத்த தேரர்கள், இலங்கையில் உள்நாட்டுப் போரில் அரசியல், போருக்குப் பிந்திய தீவிர காரணங்களும் சங்கம்:  அரசியலும் எதிர்வினைகளும் என மூன்று ஆய்வு நூல்களை எழுதியுள்ளார்.

ஆளுநகராகப் பதவியேற்கு முன்னர் சனாதிபதி செயலகத்தின் ஊடகப் பிரிவின் இயக்குநகராகப் பணிபுரிந்து வந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவரது நியமனம் பற்றி மௌனம் சாதித்தாலும் மௌனம் சம்மதத்தின் அறிகுறி என்று எடுத்துக் கொள்ளலாம். முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவரது நியமனத்தை வரவேற்றுள்ளார்.

தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட ஆளுநர் இராகவன் தான் வடக்குக்கும் தெற்குக்கும் ஒரு பாலமாக இருக்கப் போவதாகச் சொன்னார். அதற்கான தகுதி அவருக்கு இருக்கிறது. பொருத்தமும் இருக்கிறது. 

பதவி ஏற்குமுன்னர்  கடந்த  08 சனவரி (செவ்வாய்க்கிழமை)   கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைக் கண்டு உரையாடியுள்ளார். இது வரவேற்கத்தக்கது.

“அதிகாரத்தின் பக்கம் மட்டும் நிற்க வேண்டாம். மக்களின் தேவையறிந்து அவர்களின் மனதை வெல்லும் வகையில் திறம்படப் பணியாற்றுங்கள். போரால் வடக்கு மாகாணமும் அங்குள்ள மக்களும் மோசமாகப் பாதிக்கப் பட்டுள்ளமையைக் கவனத்தில்கொண்டு கடமையாற்றுங்கள்” என   இரா. சம்பந்தன் அவர்கள் சுரேன் இராகவனிடம் நேரில் தெரிவித்தார்.

மேலும் "இந்தச் சந்திப்பு திருப்திகரமாக இருந்தது. வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் யாழ்ப்பாணத்தில் நாளை  உத்தியோகபூர்வமாகக் கடமைகளைப் பொறுப்பு ஏற்கவுள்ள நிலையில் என்னை வீடு தேடி வந்து சந்தித்தமை எமக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தச் சந்திப்பின்போது வடக்கு மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பில் பேசினோம். காணி, கல்வி, தொழில், அபிவிருத்தி விடயங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தினோம்” என்றார்.

ஆளுநர் இராகவன் பதவி ஏற்ற கையோடு இரணைமடுக் குளதைச் சென்று பார்வையிட்டுள்ளார். கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குக்கும் பயிர், கண்டு காலிகளின் அழிவுக்கு இரணைமடுக்குளத்தின் வான்கதவுகள் திறக்கப்படுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமா எனக் கண்டறிய முன்னாள் ஆளுநர்  றெஜினால்ட் கூரே நியமித்த குழுவை  இந்நாள் ஆளுநர் மறுசீர் அமைத்துள்ளார்.

ஒரு மாகாணத்தை நிருவாகம் செய்வதற்குப் படிப்பறிவு மட்டும் போதாது. பட்டறிவும் வேண்டும். முப்பது ஆண்டு காலப் போரினால் பெரும் அழிவைச் சந்தித்த வட மாகாணத்தை மீள்கட்டியெழுப்புவது எளிதான செயல் அல்ல.  ஏனைய மாகாணங்களோடு ஒப்பிடும் போது வட மாகாணம், கல்வி, நல்வாழ்வு, தொழில்வாய்ப்பு போன்ற துறைகளில் மிகவும் பின்தங்கியுள்ளது.  கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரங்களைக் கட்டியெழுப்ப ஏராளமான நிதிவளம்  தேவைப்படுகிறது.

வட மாகாண சபைக்கு ஒதுக்கப்படுகிற  நிதியை சிலு சிலுப்பைகளில் வீணாக்காமல் பணியாரம் சுடப் பயன்படுத்த வேண்டும். முதலில் வட மாகாண சபையின் தேவைகள் பற்றிய மதிப்பீடு செய்ய வேண்டும். அவற்றை நிறைவேற்ற வெளிநாடுகளது உதவியைப் பெறவேண்டும். அபிவிருத்தித் திட்டங்களுக்கு முதலீடு செய்ய விரும்பும் புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட  வேண்டும்.

காலம் பொன்னானது கடமை கண்ணானது. யாழ்ப்பாணத்தில் இருந்து மதியத்தோடு கொழும்புக்குப் பறந்து சென்று பின்னர் திங்கட்கிழமை மதியம் யாழ்ப்பாணம் திரும்பினால் வட மாகாணத்தைக் கட்டியெழுப்ப முடியாது. இன்று கலைக்கப்பட்ட வட மாகாண சபையில் ஆளுநரே எல்லாம். ஐந்து அமைச்சர்கள் செய்த வேலையை அவர் ஒருவரே செய்யவேண்டும். அவருக்கு இடைஞ்சல்கள் இருக்காது. எனவே  மாகாண சபையின்  வெற்றி தோல்வி ஆளுநர் இராகவன் கையில்தான் தங்கியுள்ளது. ஆளுநர் பதவி என்பது இன்று முழுநேர வேலை.

வட மாகாணத்துக்கு ஒரு தமிழரை நியமித்த சனாதிபதி சிறிசேனா தனது கட்சியைச் சார்ந்த ஹிஸ்புல்லாவை கிழக்கு மாகாண சபையின் ஆளுநராக நியமித்துள்ளார். இந்த ஆண்டுக் கடைசியில் இடம்பெறுகிற சனாதிபதி தேர்தலில் சிறிசேனா களம் இறங்க இருக்கிறார். சிறிலங்கா பொதுமக்கள் முன்னணி யோடு கூட்டணி வைத்துப்  போட்டியிடுவது அவரது நோக்கமாக இருக்கிறது. தனித்துப் போட்டியிட்டால் அவருக்குக் கட்டுக் காசும் கிடையாது. எனவே தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த  எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவை ஆளுநராக நியமித்ததில் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்று சொல்வதில் தவறில்லை.

ஹிஸ்புல்லாவின் நியமனம் கிழக்கு மாகாணத் தமிழரிடையே எதிர்ப்பலைகளை தோற்றுவித்துள்ளது. அவரது நியமனத்துக்கு எதிராக செங்கலடியிலும் மட்டக்களப்பிலும் ஆர்ப்பாட்டப் பேரணிகள், கதவடைப்பு நடந்துள்ளன. இதற்குக் காரணம் உண்டு.

கடந்த காலங்களில் மூவின மக்களும் வாழும் கிழக்கு மாகாணத்தில் இன்றைய ஆளுநர் ஹிஸ்புல்லாவின் கரிசனை எல்லாம் முஸ்லிம் மக்களை மையமாக வைத்தே இருந்தது. அதனை ஏற்றுக் கொள்ளலாம். ஒரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் முஸ்லிம் மக்களது நலங்கள் பற்றியே அதிக அக்கறை காட்டுவார் என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கது.

ஆனால் வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டால் இரத்த ஆறு ஓடும் என்ற வன்முறைப் பேச்சு ஏற்புடையதல்ல. இது முந்திவந்த செவியைப் பிந்தி வந்த செவி மறைத்த கதையாக இருக்கும்.

ஆனால் அவரது செயல்கள் தமிழர்களை ஓரங்கட்டி முஸ்லிம்களுக்குச் சாதகமாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது வைக்கப்பட்டுள்ளதைக் குறிபிபிட வேண்டும்.

தமிழர்களுக்குச் சொந்தமான ஓட்டமாவடி காளிகோயிலை இடித்து பொதுச் சந்தை கட்டியவர். அதற்காக ஒரு நீதிபதியைத் தாம் இடம் மாற்றம் செய்ததாக பொதுவெளியில் பேசியவர்.

புல்லுமலை பகுதியில் நிலத்தடி நீரை உறிஞ்சி போத்தல்களில் விற்கும் தொழிற்சாலைக்கு உதவுபவர். மத்திய கிழக்கு அராபு நாடுகளிடம் இருந்து பெற்ற பெருந்தொகை நிதியில் மத அடிப்படையில் ஒரு பல்கலைக் கழகம் கட்டிவருகிறார். பல்கலைக் கழகக் கட்டிடம் மத்திய கிழக்கு அரபு கட்டிடக் கலையைப் பிரதிபலிக்கிறது.  ஹிஸ்புல்லா மீது இன்னும் பல குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன.

கடந்த தேர்தலில் (2015) ஹிஸ்புல்லா ஐக்கிய சுதந்திர மக்கள் முன்னணியில் போட்டியிட்டு 32,232 வாக்குகள் பெற்றுத் தோற்றவர். பின் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டவர்.

வட மாகாண சபை ஆளுநரைப் போலவே ஹிஸ்புல்லாவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களைக்  கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார். இது பாராட்டத்தக்கது. வரவேற்கத்தக்கது.

இச்சந்திப்பின்போது கிழக்கு மாகாணத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆளுநருடன் கலந்துரையாடிய இரா சம்பந்தன் அவர்கள், சட்டத்திற்கும் நீதிக்கும் முரணான சம்பவங்கள் கிழக்கு மாகாணத்தில் இடம்பெறுவதனை ஆளுநர் அனுமதிக்க கூடாது. மேலும் முக்கிய விடயங்கள் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளின் ஆலோசனையுடனான முடிவுகள் எட்டப்படுவதானது தேவையற்ற முரண்பாடுகளைத் தவிர்க்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அரச நிர்வாக நியமனங்கள் வழங்கப்படும்போது அனைத்து மக்களும் சமமாக நடாத்தப்படுத்தல் கடந்தகாலங்களில் கிழக்கு மாகாணத்தில் வாழும் பல்லின மக்களிடையே காணப்பட்ட இன விரிசல்களை இல்லாமல் செய்வதற்கும் அனைத்து இன மக்களின் அபிலாசைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் புதிய ஆளுநரும் அவரது நிர்வாகமும் செயற்படவேண்டும் என இரா சம்பந்தன் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களது  அறிவுரைகளைச் செவிமடுத்து சனநாயக விழுமியங்களை மதித்து நடக்கும் நீதியான ஆட்சியை ஆளுநரிடம் இருந்து மூவின மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.

கடந்த காலங்களில் நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனிமேல் நடப்பவை நல்லவையாக இருக்க வேண்டும். மக்களின், குறிப்பாக தமிழ்மக்களின், மனங்களை ஆளுநர் ஹிஸ்புல்லா வென்றெடுக்க வேண்டும்.