Jun 26

'தமிழர் தெருவிழா 2017' அங்குரார்ப்பண நிகழ்வு

'தமிழர் தெருவிழா 2017' அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த ஜூன் 23  வெள்ளிக்கிழமையன்று ஸ்காபரோ சிவிக் சென்ரரில் கோலாகலமாக நடந்து நிறைவேறியது.

எதிர்வரும் ஓகஸ்ட் 26, 27ந் திகதிகளில் மார்க்கம் வீதியில் சிறப்புற நடைபெறவிருக்கும் தெருவிழாக் கொண்டாட்ட நிகழ்வுகள் குறித்த விளக்கங்களும், அனுசரணையாளர்களின் அறிமுகமும் கனடியத் தமிழர் பேரவையினரால் உத்தியோகபூர்வமாக நிகழ்வின்போது வெளியிடப்பட்டன.

'தமிழர் தெருவிழா 2017'க்கான பிரதான அனுசரணையாளராக 'போர்முலா ஹொன்டா' நிறுவனமும், இணை அனுசரணையாளராக 'பொனபைட் மோர்ட்க்கேஜ்' நிறுவனமும் அறிவிக்கப்பட்டது. 

கனடிய சமூகத்தின் சமூகத் தலைவர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில், கனடிய தமிழர் பேரவையின் புதிய தலைவரான டாக்டர் சாந்தகுமார் அனைவரையும் வரவேற்று தமிழர் தெருவிழாவின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.

ஸ்காபரோ, மார்க்கம் பிரதேசங்களில் நடக்கும் மிகப்பெரும் விழா இது என்ற பெருமையை தக்கவைக்கும் வகையில் தமிழர் தெருவிழா மூன்றாவது முறையாக இவ்வாண்டும் நடைபெறவிருப்பதை டாக்டர் சாந்தகுமார் சுட்டிக்காட்டினார். உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வண. எஸ்.ஜே. இம்மானுவேல் அடிகளாரும் கலந்து கொண்டு 'தமிழர் தெருவிழா' உலகளாவிய நிலையில் அடைந்திருக்கும் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.

கனடிய நாடாளுமன்ற ரூஜ்பார்க் உறுப்பினரான கரி ஆனந்தசங்கரி, ஸ்காபரோ நோர்த் உறுப்பினர் ஷான் சென் ஆகியோருடன், ஒன்ராறியோ சட்டமன்றத்திற்கான ரூஜ்ரிவர் உறுப்பினர் ரேமன் சோ, அஜின்கோர்ட் உறுப்பினர் ஸூ வோங், ரொறன்ரோ கவுன்ஸிலர்கள் நீதன் ஷான், சின் லீ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு, தமிழ்க் கனேடியர்கள் பிற சமூகத்தினருடன் இணைந்து ஒற்றுமையுடன் மிகச் சிறப்பாகச் செய்துவரும் 'தமிழர் தெருவிழா' வெற்றிபெற வாழ்த்தினர்.

கனடிய பல்கலாச்சார வளர்ச்சியின் பகுதியாக கவனிக்கப்பட்டுவரும் 'தமிழர் தெருவிழா'வை வரவேற்று கனடியப் பிரதமர், ஒன்ராறியோ முதல்வர், ரொறன்ரோ மேயர் ஆகியோர் அளித்த வாழ்த்துச் செய்திகளும் கையளிக்கப்பட்டன. 

கலை நிகழ்ச்சிகளாக 'நிரோ கிரியேஷன்ஸ்' மாணவிகளின் தமிழ்ப் பாரம்பரிய நடனங்கள், 'பிரிமா நடனக்குழு'வினரின் நவீன நடனம் மற்றும் 'ஆதிசிலம்பம் குழு'வினரின் சிலம்பாட்டம் ஆகியவை இடம்பெற்றன, தமிழ்ப் பாரம்பரிய உணவுவகைகளும் பரிமாறப்பட்டன.