Jun 26

தமிழ்த் திரையுலகில் பாடலாலும் இசையாலும் புதிய சகாப்தத்தைப் படைத்தவர்கள் கவியரசரும் மெல்லிசை மன்னரும்.

வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கவியரசர் கண்ணதாசன், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்பிறந்த நாள் விழா, உலக இசை தின விழா ஆகிய முப்பெரும் விழாவில்,  தமிழ்த் திரையுலகில் வாழ்வின் அர்த்தமிக்க பாடல் வரிகளாலும், மனதை மீட்டும்  இசையாலும் புதிய சகாப்தத்தைப் படைத்த சாதனைக்குரிய இரட்டையர்கள் கவியரசர் கண்ணதாசனும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும் என்று கவிஞர் மு.முருகேஷ் பேசும்போது குறிப்பிட்டார்.    

       இவ்விழாவிற்கு மொழிப்போர்த் தியாகியும் வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவருமான அ.மு.உசேன் தலைமையேற்றார். சங்கச் செயலாளர் கவிஞர் பா.சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார். 

        நிகழ்வில், சிறப்பு அழைப்பாளர்களாக ஓய்வுபெற்ற தலைமையாசிரியர்கள் மு.ஏழுமலை, அசோக்குமார், ஓய்வுபெற்ற காவல்துறை அலுவலர் மா.கதிரொளி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

‘கலைச்சுடர் மணி’ பெ.பார்த்திபன், கவிஞர் பு.குமரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

     பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கவியரசர் பற்றியும், எம்.எஸ்.விஸ்வநாதன் பற்றியுமான கவிதைகளை வாசித்தனர். இசைப்பள்ளி மாணவர்களின் இசை நிகழ்வும் நடந்தது.

    விழாவில் பங்கேற்ற வந்தவாசி நூலக வாச்கர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் பேசும்போது, “தமிழ்த் திரையுலகம் என்றென்றும் நினைவில் வைத்திருக்க வேண்டிய இரு மகத்தான ஆளுமைமிக்க மனிதர்கள் கவியரசர் கண்ணதாசனும், மெலிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும். கவித்துவமான பாடல் வரிகளால் படத்தின் ஆன்மாவையே சுருக்கமாகச் சொன்னதில் கவியரசருக்கு நிகர் வேறு யாருமில்லை. அதேபோல், சங்க இலக்கியப் பாடல் வரிகளை பாமரரும் ரசிக்கும் வகையில் எளிமையான பாடல்களாகத் தந்தவர். திரைப்பட பாடலின் ஊடாக, தனது வாழ்வியல் சம்பவங்களையும் நெருடல் இல்லாமல் மிக நுட்பமாக பதிவு செய்தவர் கண்ணதாசன். ‘வீடு வரை உறவு, வீதுவரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசிவரை யாரோ..?’ என நான்கே வரிகளில் வாழ்க்கையைப் படம் பிடித்துக்காட்டியவர் கண்ணதாசன். 

    மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், பாடல் வரிகளுக்கு இசையால் உயிர்க் கொடுத்தவர். பாடல் வரிகளை மீறி தன் இசையால் ஆதிக்கம் செலுத்தாதவர். படத்தின் மொத்த கதைப் போக்கினையும் உள்வாங்கிக் கொண்டு அதற்கு தன் இசையால் மேலும் மெருகேற்றியவர் எம்.எஸ்.வி.

கண்ணதாசனும் விஸ்வநாதனும் இரட்டைச் சகோதரர்கள் போல் அன்பால் நட்பால் இணைந்திருந்தவர்கள். அப்படிப்பட்ட இருவரின் பிறந்த நாட்கள் ஒரே நாளில் வருவது மிகவும் பொருத்தமானது. இன்றைக்கு பாடல் வரிகளைக் காது கொடுத்து கேட்கவே முடியாத வகையில் திரைப்படங்களில் பாடல்கள் இடம்பெறுகின்றன. அதேபோல், இசை என்பதே வெறும் இரைச்சலாகி, என்ன பாடல் வரிகள் என்ன்வென்றே கேட்காத சூழலும் உள்ளது. இந்நிலையில், தமிழ்த் திரையுலகில் மகத்தான சாதனைகளைப் படைத்த இந்த இருவரையும் தமிழ்த் திரையுலகம் மட்டுமின்றி, தமிழ் கலை இலக்கிய உலகமும் கொண்டாட வேண்டியது நம் கடமையாகும்” என்றார்.        நிறைவாக, சங்கப் பொருளாளர் எ.தேவா நன்றி கூறினார். 

    படக்குறிப்பு :

         வந்தவாசியில் வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், வந்தவாசி நூலக வாச்கர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் பேசியபோது எடுத்த படம். அருகில், சங்கத் தலைவர் அ.மு.உசேன், ஓய்வுபெற்ற தலைமையாசிரியர்கள் அசோக்குமார், மு.ஏழுமலை, செயலாளர் பா.சீனிவாசன் உள்ளிஓர் உள்ளனர்.