Mar 20

ஆஸி. - இந்தியா 3ஆவது போட்டி சமநிலையில் நிறைவு

அவுஸ்திரேலியா மற்றும் இந்திய  அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது.

இந்திய அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 451ஓட்டங்களை பெற்றது. அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித்178, கிளன் மெக்ஸ்வெல்(104) சதமடித்தனர்.

ரவீந்திர ஜடேஜா ஐந்து விக்கெட்டுக்களையும் உமேஷ் ஜாதவ் மூன்று விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். பின்னர்  முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 603 ஓட்டங்களைக் குவித்து ஆட்டத்தை இடைநிறுத்தியது. 

புஜாரா 202 ஓட்டங்களையும், சாஹா 117ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பற் கம்மிங்ஸ் நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

152 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலியா 4ஆவது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 23 ஓட்டங்களை எடுத்திருந்தது.

ஐந்தவதும் இறுதியுமான இன்று ஆட்டம் தொடர்ந்த பொது 29.1 ஓவரில் 63 ஓட்டங்களை எடுத்திருந்த ஆஸி. நான்கு விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து தடுமாறியது. 

எனினும் ஐந்தாவது விக்கெட்டுக்காக ஷேன் மார்ஷ் உடன் ஜோடி சேர்ந்த ஹேண்ட்ஸ்காம்ப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

இறுதியாக இந்தியாவை விடவும் ஆஸி. 35ஓட்டங்கள்; முன்னிலைப் பெற்றிருந்தபோது மார்ஷ் (53) ஜடேஜாவின் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து மெக்ஸ்வெல் (02) ஆட்டம் இழந்தார்.

பின்னர் 7ஆவது விக்கெட்டுக்காக ஹேண்ட்ஸ்காம்ப் உடன் மத்தியூ வெயிட் ஜோடி சேர்ந்தார். அவரும் நிதானமாக ஆட அவுஸ்திரேலியா 100 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 204 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது  ஆட்டத்தை முடித்துக் கொள்ள இரு அணி தலைவர்களும் ஒப்புக் கொண்டதால் ஆட்டம் சமநிலையில் முடிந்ததாக நடுவர்கள் அறிவித்தனர்.

ஹேண்ட்ஸ்காம்ப் 72ஓட்டங்களுடனும், வெயிட் 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர். இந்திய அணி சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.போட்டியின் ஆட்டநாயகனாக புஜாரா தெரிவானார்.

தற்போது தொடர் 1-1 என சமநிலையில் உள்ள நிலையில் 4ஆவதும் இறுதியுமான போட்டி 25ஆம் திகதி தரம்சாலாவில் ஆரம்பமாகவுள்ளது.