Mar 20

சுஷ்மா சுவராஜ் - இராமேஸ்வர மீனவர்கள் குழு சந்திப்பு

இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இரமேஸ்வரம் மீனவர்கள் குழு டெல்லி விரைந்துள்ளது.

நாளை நடைபெறவுள்ள இந்த சந்திப்பில் மீனவர் சங்க பொறுப்பாளர்கள் தேவதாஸ், சேசுராஜா, அருளானந்தம், ஜஸ்டின், அந்தோணிசாமி, சைமன் ஆகிய 6 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்கவுள்ளதோடு  பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் சுப. நாகராஜன், இராமநாதபுரம் மாவட்டத்தலைவர் முரளிதரன் ஆகியோரும் டெல்லிக்கு புறப்பட்டுள்ளனர். 

இரமேஸ்வரம் தங்கச்சிமடம் மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதை கண்டித்து மீனவர்கள் 10 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தினார்கள்.

மத்திய அமைச்சர்களான  நிர்மலா சீத்தாராமன், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்திக்க அனுமதி பெற்றுத்தருவதாகவும், எதிர்காலத்தில் இவ்வாறான தாக்குதல்கள் நடைபெறக் கூடாது என இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர். 

இதனைத்தொடர்ந்து மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.