Jun 24

ஹலிஃபெக்சில் 18 வயது பெண்ணைக் கொன்றதாக 16 வயது சிறுவன் கைது

ஹலிஃபெக்சில் 18 வயது யுவதி ஒருவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு 16 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆறாம் திகதி இரவு பத்து மணியளவில், ஹலிஃபெக்சின் டார்ட்மவுத் பகுதியின் வடபுறத்தே உள்ள நடைபாதை ஒன்றில், இளம் பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் 18 வயதான செல்சீ பிரபோர்ட் எனப்படும் அந்தப் பெண், மோசமான காயங்கள் காரணமாக சிகிச்சைகள் பலனளிக்காது சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

இவரது மரணத்துக்கான காரணம் தொடர்பில் தகவல்கள் எதனையும் இதுவரை வெளியிடாத ஹலிஃபெக்ஸ் பிராந்திய காவல்த்துறையின் மனித கொலை தொடர்பிலான சிறப்பு விசாரணைப் பிரிவினர், டார்ட்மவுத் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 16 வயது சிறுவன் ஒருவரை நேற்று கைது செய்துள்ளனர்.

அவரது வயது காரணமாக பெயர் விபரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை.

அவர் மீது இரண்டாம் தர கொலைக் குற்றச்சாட்டினைப் பதிவு செய்துள்ள காவல்த்துறையினர், அவரை சிறுவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

இருந்த போதிலும், இந்த கொலைச் சம்பவம் எவ்வாறு எதற்காக இடம்பெற்றது போன்ற மேலதிக விபரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை.