Jun 23

ஒன்றிய பிரஜைகளின் வதிவிட உத்தரவாதம் நியாயமானது: பிரதமர் தெரேசா மே

பிரெக்சிற்றிற்கு பின்னர் ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் தொடர்ந்தும் பிரித்தானியாவில் வசிக்க முடியும் என தெரிவிக்கப்பட்ட திட்டம் நியாயமானது எனவும், அது தொடர்பில் தான் தீவிரமாக இருப்பதாகவும் பிரதமர் தெரேசா மே குறிப்பிட்டுள்ளார்.

பிரஸ்சல்ஸில் இன்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பிரித்தானியாவின் நிரந்தர பிரதிநிதி டிம் பாரோவுடன் (Tim Barrow) கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் உரையாற்றுகையில், “நான் நேற்று தெரிவித்த வதிவிட உத்தரவாதம் குறித்த திட்டம் தொடர்பில் நான் தீவிரமாக உள்ளேன். பிரித்தானியாவின் வெளியேற்றத்திற்கு பின்னர் ஒன்றிய பிரஜைகள் அவர்களது குடும்பங்களை பிரிந்து வாழ வேண்டிய நிலை ஏற்படாது. இது போன்ற உத்தரவாதம் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பிரித்தானியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என நான் எதிர்பார்க்கின்றேன். குறித்த திட்டம் தொடர்பான விரிவான விளக்கங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முன்வைக்கப்படும்” என தெரிவித்தார்.

அத்துடன், குறித்த திட்டம் தொடர்பான விரிவான விளக்கங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முன்வைக்கப்படும் எனவும் மே குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், பிரித்தானியாவில் வாழும் ஒன்றிய பிரஜைகளின் வதிவிட உத்தரவாதம் குறித்து மேயினால் தெரிவிக்கப்பட்ட திட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த திட்டம் தொடர்பான கேள்விகள் மற்றும் பதில்களை அது தொடர்பான கலந்துரையாடலின் போது எதிர்பார்க்கலாம் என மே குறிப்பிட்டுள்ளார்.