Jun 23

பிரித்தானியாவின் பிரெக்சிற் உத்தரவாதம் சிறந்த ஆரம்பத்திற்கான அறிகுறி – ஜேர்மனி

பிரெக்சிற்றின் பின்னர் பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகளின் வதிவிடம் தொடர்பில் உத்தரவாதம் வழங்கப்படும் என்பது ஒரு சிறந்த ஆரம்பத்திற்கான அறிகுறி என ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கல் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பிரெக்சிற் தொடர்பில் இன்னும்  பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட வேண்டும் எனவும் அது தொடர்பில் அக்கறை செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை பிரஸ்சல்ஸில் நடத்தப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே, பிரெக்சிற் தொடர்பான திட்டத்தை முன்மொழிந்துள்ளார். குறித்த திட்டத்தில், பிரித்தானியாவில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்து வந்தவர்களுக்கு வதிவிட உத்தரவாதம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்கள் சுகாதார, கல்வி மற்றும் ஏனைய சலுகைகளை அனுபவிக்கும் தகுதியைப் பெறுவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் தற்போது சுமார் 3.2 மில்லியன் ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.