Mar 20

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் ஊடகங்கள் பங்களிக்கவில்லை; சாடுகிறார் சுமந்திரன்

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் ஊடகங்கள் முக்கிய பங்களிப்பை மேற்கொள்ளாமல் இருப்பதாக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். எ. சுமந்திரன் தெரிவித்தார்.  

வெலிகம பிரகடனம் மீதான ஒரு பார்வை எனும் தலைப்பில் இம்தியாஸ் பாகிர் மாக்கர் மையம் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்வு இலங்கை தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது

இந்நிகழ்வில் கலந்துகொண்டசுமந்திரன் எம்.பி  உரையாற்றுகையில்,

யுத்தத்தின் பின்னர்  எட்டு ஆண்டுகள் நிறைவடைந்தும் இந்த நாட்டிலே தேசிய ஒற்றுமைக்கான பயணத்தை சரியாக கையாள முடியாத ஒரு தருணத்தில் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம்.

ஊடகத்தை சேர்ந்தவர்கள் இவ்வாறான பொறுப்பான வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தாலும் கூட ஊடகங்களின் செயற்பாடுகள் இந்த பத்து ஆண்டு காலத்தில் மிகவும் கவலைக்கிடமான வகையில் அமைந்துள்ளன.

தேசிய ஒற்றுமையை பலப்படுத்தும் வகையில் பலர் செயற்பட்டு இருந்தாலும் ஒரு சில ஊடகங்கள் அதனை சிதைப்பதற்காக செயற்படுகின்றனவா என்ற நியாயமான சந்தேகம் எழும் வகையில் நடந்துகொள்கின்றன .

தமிழ் பத்திரிகைகளை பார்த்தால் அவற்றின் ஊடாக  கூட தேசிய ஒற்றுமையை உறுதிப்படுத்தும் வகையில் செயற்படுவதாக தெரியவில்லை. பிரதான பத்திரிகைகளில் வரும் கட்டுரைகளை வாசித்தால் இந்த நாடு ஒருமைப்பட்டு செயற்படக் கூடாது என்ற அடிப்படையில் தான் அமைந்துள்ளன.

 ஒரு சில உண்மைகள் மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் வெளிப்படுத்தப்பட்டு வந்தாலும் கூட  பெரும்பாலும் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை முன்வைத்துதான் இந்த கட்டுரைகள் பிரசுரிக்கப்படுகின்றன.

இப்படியான ஒரு நோக்கத்தில் ஊடகங்கள் செயற்படுமாக இருந்தால் நாட்டின்  நிலைமை மிகவும் மோசமானதாக  உருவாகிவிடும். நாம் முன்வைக்கும் கருத்துக்கள் வேறுபட்ட கருத்துக்களை உருவாக்கும் வகையில் அமைந்து விடக் கூடாது.

புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் ஊடகங்களின் பங்களிப்பு எந்த வகையில் அமைந்துள்ளன என்பதே எமது கேள்வியாக உள்ளது.

இன்று பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிலர் அரசியல் அமைப்பு தொடர்பில் தவறான கருத்துகளை முன்வைத்து வரும் நிலையில் ஊடகங்களால் அவர்களுக்கு ஒரு சவாலை முன்வைக்க முடியாத என்ற கேள்வி எம்மத்தியில் எழுகின்றது.

புதிய அரசியல் அமைப்பு ஒன்று இந்த நாட்டிற்கு தேவையில்லை எனவும், சர்வஜன வாக்கெடுப்பிற்கு விடக் கூடாது எனவும் கூறுகின்றனர். இந்த நிலையில் ஊடகங்களின் கேள்விகள்  அவர்கள் மீது அமைய வேண்டும்.

அதாவது பாராளுமன்றத்தில்  இது தொடர்பில் ஏகமனதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது ஏன் அதை எதிர்க்கவில்லை என்ற கேள்வி எழுப்பபப்ட வேண்டும். ஏகமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி விட்டு இன்று மாறுபட்ட கருத்துக்களை கூறுகிறனர்.  இது தொடர்பில் உரிய நபர்களிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்ப  வேண்டும். 

தேசிய ஓற்றுமையை உருவாக்கும் அடிப்படை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றை உறுதிப்படுத்த ஊடகங்கள் தமது பொறுப்புக்களை உணர்ந்து செயற்பட வேண்டும் என்றார்.