Jun 23

ஒன்ராறியோவின் பெரும்பாலானோர் முதலமைச்சரை நிராகரிக்கின்றனர்

ஒன்ராறியோ மக்கள் தொகையில் பெருமளவானோர் ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின்னை நிராகரிப்பதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மெயின்ஸ்றீட்/போஸ்ட்மீடியா அமைப்பு அண்மையில் மேற்கொண்ட கருத்துக்கணிப்பின் முடிவுகளின் அடிப்படையில், ஒன்ராறியோவில் 70 சதவீதம் பேர் முதல்வர் கத்தலின் வின்னை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது.

அனைத்து 10 மாகாண முதல்வர்களுக்கான, மாநில அளவிலான மற்றும் தேசிய அளவிலான ஆதரவு நிலைப்பாட்டினை இந்த கருத்துக் கணிப்பு பதிவு செய்துள்ள நிலையில், ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின்னை மாநில அளவில் 70 சதவீதம் பேரும், தேசிய அளவில் 48 சதவீதம் பேரும் நிராகரிக்கின்றமை தெரிய வந்துள்ளது.

அது மட்டுமின்றி, கனடாவின் அனைத்து மாநில முதல்வர்களுடனும் ஒப்பிடுகையில், தற்போது ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின்னே குறைந்த அளவிலான மக்கள் ஆதரவினைக் கொண்டுள்ளவர் என்பதையும் இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன.

இதேவேளை தற்போதய நிலவரப்படி கியூபெக் முதல்வர் பிலிப் கோலியாட் மற்றும் அல்பேர்ட்டா முதல்வர் றேச்சல் நோட்லி ஆகியோரே, தேசிய அளவில் அதிக வரவேற்பை பெற்ற முதல்வர்களாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை பிரதமர் ஜஸ்டின் ரூடோவுக்கான தற்போதய மக்கள் ஆதரவு நிலைப்பாடு தொடர்பிலும் கணிப்பீட்டினை வெளியிட்டுள்ள இந்த நிறுவனம், பிரதமருக்கு தற்போது நாடு தழுவிய ரீதியில் 54 சதவீத ஆதரவு உள்ளதாகவும், அதில் நியூ பிரவுன்ஸ்விக், நோவா ஸ்கொட்ஷியா, கியூபெக் ஆகிய மாநிலங்களிலேயே அதிக ஆதரவு உள்ளதாகவும், சாஸ்காச்சுவான், அல்பேர்ட்டா ஆகிய மாநிலங்களில் குறைந்த அளவிலான ஆதரவு காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.