Jun 23

ஆண்டு முழுவதும் நீச்சல் தடாகங்கள் இலவசம்

எதிர்வரும் “கனடா டே” நாளில் இருந்து இந்த 2017ஆம் ஆண்டு முழுவதற்கும் எட்மண்டனில் உள்ள வெளிக்கள நீச்சல் தடாகங்கள் அனைத்தையும் மக்கள் இலவசமாக பயன்படுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் 150ஆவது பிறந்த நாள் இந்த ஆண்டில் கொண்டாடப்படுகின்றமையை முன்னிட்டு இந்த சிறப்புச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

கனடாவில் தேசிய அளவிலான பல பூங்காக்களை இந்த ஆண்டில் பயணிகள் இலவசமாக பயன்படுத்த முடியும் என்ற அறிவிப்பினை கனேடிய மத்திய அரசாங்கம் விடுத்துள்ளதுடன், அது பெருமளவிலான சுற்றுலா பயணிகளையும் ஈர்த்துள்ள நிலையில், எட்மண்டன் நகரம் தனது நகர மட்டத்தில் இந்த இலவச அறிவிப்பினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எட்மண்டனில் உள்ள இவ்வாறான வெளிப்புற நீச்சல் தடாகங்கள் அனைத்தினையும் பயன்படுத்த வரும் மக்கள், எந்தவித கட்டணமும் செலுத்தாது அவற்றில் நீச்சலடிக்க முடியும் என்ற போதிலும், அதனை வாடகைக்கு பெற விரும்புவோருக்கும், நீச்சல் பயிற்சிகளை பெற விரும்புவோருக்கும் கட்டணம் அறவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு உட்பட ஒவ்வெரு தரப்பினரும் ஒவ்வொரு விதமாக கனடாவின் இந்த 150ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிவரும் நிலையில், தமது பங்குக்கு எதனைச் செய்தால் சிறப்பாக இருக்கும் என்று ஆலோசித்ததன் விளைவே இந்த இலவச நீச்சல் தடாக திட்டம் என்று எட்மண்டன் நகரின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் எட்மண்டன் நகரின் வெளிப்புற நீச்சல் தடாகங்களான Queen Elizabeth, Fred Broadstock, Mill Creek, Oliver ஆகிய நான்கு நீச்சல் தடாகங்களும் பொதுமக்களின் பாவனைக்காக இலவசமாக திறந்து விடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எட்மண்டனின் இந்த நீச்சல் தடாகங்களுக்கு வழக்கமாக ஒரு குடும்பத்துக்கு $20.50 என்ற வீதத்தில் அறவிடப்படுவதுடன், கடந்த ஆண்டில் இதனை சுமார் 89,000 பேர் பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.