Mar 20

தன்னியக்கமாக்கல் காரணமாக கனடாவில் பெருமளவிலான வேலை இழப்புக்கள் ஏற்படலாம்

தன்னியக்கமாக்கல் மூலம் எதிர்வரும் ஆண்டுகளில் கனடாவில் 1.5 மில்லியன் தொடக்கம் 7.5 மில்லியன் வரையான வேலைகள் இழக்கப்படும் அபாயம் உள்ளதென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கனேடிய வேலைவாய்ப்பு மற்றும் சமூக அபிவிருத்தி திணைக்களத்தின் உயர் அதிகாரிகளுக்காகத் தயாரிக்கப்பட்ட ஆவணங்களில், இவ்வாறான தன்னியக்கமாக்கல் காரணமாக ஏற்படவுள்ள வேலை இழப்புக்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் இவ்வேலை இழப்பை அரசாங்கம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்றோ அல்லது அமுல் படுத்தப்படவுள்ள புதிய நடைமுறைகள் பற்றியோ குறிப்பிடப்படவில்லை எனக் குறை கூறப்பட்டும் உள்ளது.

ஏற்கனவே பல தொழிற்துறைகளில் இயந்திரங்களும், தன்னியக்கமாக்கல் முறைமைகளும் (Automation Systems) மனிதர் புரியும் வேலைகளைச் செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் மட்டுமன்றி நிதி ஆலோசகர்கள், ஆட்சேர்ப்பு அதிகாரிகள் போன்றோர் செய்யும் செயற்பாடுகளும் தற்போது கணினிமயப்படுத்தப்பட்டுள்ளதால், அனைத்துத் துறைகளிலும் வேலை இழப்புக்கள் ஏற்படக்கூடிய அபாயம் குறித்து எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.