Jun 22

ரொரன்ரோ கபேஜ்டவுனில் கத்திக்குத்து

ரொரன்ரோ கபேஜ்டவுன் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அபெர்டீன் அவனியூவுக்கும் வின்செஸ்டன் வீதிக்கும் இடைப்பட்ட பகுதியில், நாடாளுமன்ற வீதியில் அமைந்துள்ள, மூன்று மாடி ரொரன்ரோ வீடமைப்பு பேட்டைக் குடியிருப்பு ஒன்றில் நேற்று இரவு 9.15 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த ரொரன்ரோ அவசர மருத்துவப் பிரிவினர், மிகவும் மோசமான நிலையில் காணப்பட்ட, சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபரை உடனடியாகவே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள போதிலும், அவரது உடல்நிலை குறித்த அண்மைய தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.

குறித்த இந்த கத்திக் குத்துச் சம்பவம் கட்டிடத்தின் உள்ளேயா அல்லது வெளியேயா இடம்பெற்றது என்பது இன்னமும் தெளிவாக தெரியாத நிலையில், காவல்த்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.