Jun 22

ப்ளிப் போன் தயாரிக்கும் சாம்சங்: இணையத்தில் லீக் ஆன புதிய தகவல்கள்

சாம்சங் நிறுவனம் புதிய ப்ளிப் போன் ஒன்றை தயாரித்து வருவதாக சீன இணையதளத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சர்வதேச சந்தையில் ஸ்மார்ட்போன்களின் விற்பனை முன்னணியில் இருக்கும் நிலையில், சாம்சங் நிறுவனம் புதிய ப்ளிப் போன் ஒன்றை தயாரித்து வருகிறது.

சீன இணையத்தளம் ஒன்றில் SM-G1650 பெயரில் சாம்சங் ப்ளிப் போன் சார்ந்த தகவல்கள் கசிந்துள்ளது. ஏற்கனவே இதே பெயரில் ப்ளிப் போனின் தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

புதிய சாம்சங் ப்ளிப் போன் சாம்சங் கேலக்ஸி ஃபோல்டர் 2 என அழைக்கப்படும் என்றும் கருப்பு நிறத்தில் கோல்டு நிற கீபேட் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஹோம் பட்டன், பேக் பட்டன்கள் மட்டுமின்றி கேமரா, மின்னஞ்சல் மற்றும் மெசேஜிங் அம்சங்களுக்கு ஷார்ட்கட் பட்டன்களும் இடம்பெறும்.  

சிறப்பம்சங்களை பொருத்த வரை 3.8 இன்ச், 800x480 பிக்சல் டிஸ்ப்ளே, குவாட்கோர் சிப்செட், 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி என இரண்டு மாடல்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

புகைப்படங்களை எடுக்க 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 5 எம்பி செல்ஃபி கேமரா, 1950 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டு இயங்கும் என கூறப்படுகிறது. 

இந்நிலையில், சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 8 மற்றும் மேம்படுத்தப்பட்ட நோட் 7 ஸ்மார்ட்போன்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் எஸ் 3 இந்தியாவில் வெளியிடப்பட்டது.