Jun 22

முதியோர் இல்லத்தில் தீ பரவல் : இருவர் மருத்துவமனையில்

ஸ்காபரோ Benleigh Drive பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் நேற்று அதிகாலை வேளையில் தீப் பரவல் ஏற்பட்டுள்ளது..

மக்கவன் வீதி மற்றும் லேறன்ஸ் அவனியூ பகுதியில் அமைந்துள்ள அந்த முதியோர் காப்பகத்தில் அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட அந்த தீப்பரவலால் இருவர் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் உடனடியாகவே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுள் ஒருவர் ஆண் நபர் என்றும், மற்றையவர் பெண் நபர் என்றும், அவர்கள் இருவரும் சுமார் 80 வயது மதிக்கத்தக்க முதியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இருவரும் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், காயங்கள் பாரதூரமானவையாக இல்லாத போதிலும், அவர்களது வயது காரணமாக உடல்நிலை குறித்து கவலை வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை தகவல் அறிந்து அந்த முதியோர் இல்லத்தை தாங்கள் சென்றடைந்த போது, குறித்த அந்த கட்டிடத்திலிருந்து பலத்த தீயும் புகையும் வெளியேறியவாறு காணப்பட்டதாக ரொரன்ரொ தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் விரைந்து செயற்பட்ட தீயணைப்புப் படையினர் அந்த தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளனர்.

இந்த தீ விபத்து நேர்ந்தமைக்கான காரணம் தொடர்பிலோ, விபத்தினால் ஏற்பட்ட சேதாரங்கள் தொடர்பிலோ தகவல்கள் எவையும் உடனடியாக வெளியிடப்படவில்லை.