Jun 22

றோயல் வங்கியில் 450 பேர் பணி நீக்கம்

தமது வங்கியில் பணிபுரியும் சுமார் 450 பேரைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாகவும், பெரும்பாலும் தமது தலைமை அலுவலகம் அமைந்துள்ள ரொரன்ரோ பெரும்பாக பகுதிகளிலேயே இந்த பணி நீக்கங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கனடா றோயல் வங்கி அறிவித்துள்ளது.

நேற்று காலை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின் மூலமாக, 450 பேர் வேலை இழக்கவுள்ள இந்த நடவடிக்கையினை குறித்த அந்த வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.

தமது வாடிக்கையாளர்களின் தேவைகளை ஈடுசெய்யும் வகையிலான மாற்றங்களை தாம் ஏற்படுத்தி வருவதாகவும், அதன் ஒரு பகுதியாகவே 450 பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கும் முடிவு மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி நடவடிக்கைகளை தற்போதய தேவைகளுக்கு ஏற்ப மேம்படுத்தும் போது, எந்தெந்த பகுதிகளுக்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளதோ, அவ்வாறான பகுதிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும், அந்த வகையில் கணணி மயமாக்கல், இலத்திரனியல் தரவு மேலான்மை, நவீன தொழில்நுட்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிக நிதி முதலிடப்படவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அது விபரித்துள்ளது.

தமது ஆளணி மேலான்மையிலும் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ப்படுவதாகவும், பதவி உயர்வுகள், இடமாற்றங்கள், புதிய வேலை உருவாக்கங்கள், புதிய பணிக்குழு உருவாக்கங்கள், புதிய தேவைகளுக்கான தொழில் வாய்ப்புகள் உள்ளிட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்த 450 பேரின் பணி நீக்கமும் மேற்கொள்ளப்படுவதாகவும் அது தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த பணி இழப்பினால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கான நீடித்த கால கொடுப்பனவு உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.