Jun 22

மத்திய அல்பேர்ட்டாவில் சூறைக் காற்று

அல்பேர்ட்டாவின் மத்திய பகுதியில் நேற்று வீசிய சூறைக் காற்று காரணமாக, பல்வேறு குடியிருப்பு பகுதிகளிலும் மரங்கள், கம்பங்கள் முறிந்து வீழந்ததுடன், அப்பகுதிகளுக்கான மின் வினியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அல்பேர்ட்டாவின் மத்திய பிராந்தியமான ரெட் டியர் பகுதியில் உள்ளூர் நேரப்படி நேற்று இரவு ஏழு மணியளவில் ஆரம்பித்த இந்த சுழல் காற்று, அங்கு பலத்த சேதத்தினை உண்டுபண்ணியுள்ளது.

ரெட் டியர் விமான நிலையத்தில் சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி, அங்கு மணிக்கு 110 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் அந்த சூறைக் காற்று வீசியதாக கூறப்படுகிறது.இந்த சுழல் காற்று நீண்ட நேரம் நீடிக்கவில்ல என்ற போதிலும், சிறிது நேரத்திலேயே பெரிய மரங்களையும், கம்பங்களையும் வீழ்த்தியதுடன், பெருமளவிலான குப்பை கூழங்களை வீதிகளிலும், வீடுகளின் மீதும் வீசியுள்ளது.

எங்கிருந்து வந்தது என்று சிந்திப்பதற்குள் தீடீரென வந்த சுழல் கர்றறு, தனது வீட்டின் பின் பகுதியை சேதப்படுத்திவிட்டுச் சென்றதாக அங்கிருந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

அங்கிருந்த வங்கி கட்டிடம் ஒன்றின் கூரைப் பகுதி பெயர்த்து வீசப்பட்டுள்ள நிலையில், மேலும் பல கட்டிடங்களின் யன்னல்கள் உடைந்து போயுள்ளதாகவும், ஒரே வீதியில் நிரையாக இருந்த ஐந்து வீடுகள் மீது மரங்கள் வீழ்ந்து போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.தனது வாழ்நாளில் இதுவரை கண்டிராத அளவு மோசமான சூறைக் காற்று நேற்று இரவு வீசியதாகவும், இதனை வேறு எந்த சூறைக் காற்று சம்பங்களுடனும் ஒப்பிட முடியாது எனவும் குறித்த அந்த நகரத்தின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

அந்த நகரில் உள்ள பெருமளவான வீடுகளுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை சீர் செய்ய குறைந்தது நான்கு நாட்கள் ஆகும் என்று தெரிவிக்கப்படுகிறது.