Jun 21

மகாராணியின் நாடாளுமன்ற உரை இன்று!

பிரித்தானிய நாடாளுமன்ற ஆரம்ப அமர்வு இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் வழக்கம் போன்று மகாராணி எலிசபெத் உரையாற்றவுள்ளார்.

அவருடை உரையில் பிரெக்சிற் விவகாரம் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை உள்நாட்டு வன்முறைகள் மற்றும் கார் காப்பீட்டு விவகாரங்களும் உள்ளடக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் பிரித்தானிய அரசாங்கம் சட்டமன்ற திட்டங்களை முன்வைப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்ற நிலையில் பணிவு மற்றும் கருத்து உறுதிப்பாட்டுடன் பணிபுரிவதாக பிரதமர் தெரேசா மே உறுதியளித்துள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்ற நிகழ்வுகளில் மிகவும் முக்கியம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படும் நாடாளுமன்ற ஆரம்ப அமர்வு இன்று (புதன்கிழமை) உள்ளூர் நேரப்படி 11.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில், அரசாங்கத்தினால் எழுதப்பட்ட சட்டமன்ற திட்ட அறிக்கையை மகாராணி வாசிக்கவுள்ளார். அதன்பின்னர் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதிப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.