Mar 19

உத்தர பிரதேச முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவியேற்பு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் லக்னோவில் உள்ள கன்ஷிராம் ஸ்மிரிதி உப்வானில் இன்று பிற்பகல் நடைபெற்ற கோலாகல விழாவில் உத்தரபிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்று கொண்டார். 

அவருக்கும், துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா, தினேஷ் சர்மா மற்றும் இதர அமைச்சர்கள் ஆகியோருக்கும் ஆளநர் ராம்நாயக் பதவிப்பிரமாணமும், இரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 

உத்திரப்பிரதேசம் மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அவரது தந்தையும் சமாஜ் வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ், பா.ஜ.க. மூத்த தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, அத்வானி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் இவ்விழாவில் பங்கேற்றனர்.

உத்தரபிரதேசத்தின் 32ஆவது முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள யோகி ஆதித்யநாத், இன்றைய உத்தரகாண்ட் மாநிலம், பாஞ்சூரில் 1972ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 5ஆம் திகதி பிறந்தவர். இவரது இயற்பெயர் அஜய்சிங்.  

எச்.என்.பி. கார்வால் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. பட்டம் பெற்றவர். ராஜபுத்திர குடும்பத்தை சேர்ந்தவர். 'இந்து யுவ வாஹினி' என்ற சமூக, கலாசார அமைப்பை நிறுவி நடத்தி வந்தார். அத்துடன் கோரக்பூர் கோரக்நாத் மடத்தின் தலைவராகவும் இருந்து வந்தார்.

1998ஆம் ஆண்டு தனது 26ஆவது வயதிலேயே கோரக்பூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாவும் வெற்றி பெற்றதோடு தொடர்ந்து 1999, 2004, 2009, 2014 பாராளுமன்ற தேர்தல்களிலும் வெற்றி பெற்று எம்.பி.,யாக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.