Mar 19

தமிழக அரசு விவசாயிகள் உயிரிழப்பை கண்டுக்கொள்வதில்லை; கனிமொழி சாடல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், விளை பொருட்களுக்கு நியாயமான விலை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் 6ஆவது நாளை எட்டிய நிலையில் மத்திய, மாநில அரசுகள் தரப்பில் அவர்களிடம் யாரும் இதுவரையில் பேசவில்லை. 

இந்நிலையில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை சந்தித்து தி.மு.க.வின் எம்.பி.யான கனிமொழி பேசினார். 

மத்திய அரசும், தமிழக அரசும் விவசாயிகளின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்பதற்கு தயாராக இல்லை. தமிழக அரசு விவசாயிகள் உயிரிழப்பை கண்டுக்கொள்வதில்லை. 

தங்களது வாழ்வாதாரத்துக்காக போராடிவரும் விவசாயிகளை மாநில அரசு தரப்பில் யாரும் இதுவரை சந்திக்கவில்லை. மத்திய அரசும் என்னவென்று கேட்பதற்கு தயாராக இல்லை. 

மத்திய அரசு தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் மட்டும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகள் பிரச்சனைகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் தி.மு.க. தொடர்ந்து குரல் எழுப்பும் என தெரிவித்துள்ளார்.