Nov 30

நாசாவின் வியத்தகு சாதனை செவ்வாக் கோளை ஆராய மற்றுமோர் விண்கலம் தரையிறக்கம் நக்கீரன்

வானை அளப்போம் கடல் மீனை அளப்போம்...

சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்...” 

என்று மகாகவி பாரதியார் பாடினார்.

பாரதியாரின் கனவை அமெரிக்க வானியலாளர்கள்தான் பேரளவு  நினைவாக்கி வருகிறார்கள். இன்று விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்கா  கொடி கட்டிப் பறக்கிறது.   

விண்வெளி ஆராய்ச்சிக்குப் பொறுப்பான நாசா  இந்த ஆண்டு (2018) தனது அறுபதாவது  பிறந்த  நாளைக்  கொண்டாடியது.

அமெரிக்காவில் நாசா என்ற சொல் ஒரு வீட்டுச் சொல். அமெரிக்க நாட்டின் குடிமகன்  ஒவ்வொருவரையும் பெருமிதம் அடைய வைக்கும்  சொல்.

விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் இருக்கும் நாசா அறுபதுகளில் இருந்து இன்றுவரை நிலா, செவ்வாய், சனிக் கோளின் ரித்ரான் (Titan) என ஞாயிறு குடும்பத்தில் இருக்கும் எல்லாக் கோள்களுக்கும் விண்கலங்களை அனுப்பியிருக்கிறது. 

2030 ஆண்டளவில் அல்லது 2040 முற்பகுதியில்  செவ்வாயில் மனிதர்களை இறக்க  இருக்கிறது.  இதற்கான செலவு $450 பில்லியன் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இன்று நாசா எதற்கெல்லாம் பணம் செலவிட இருக்கிறது?  மிகவும் ஆற்றல் வாய்ந்த (1) விண்வெளி விண்கலம் (2) யேம்ஸ் வெப் வான்வெளி (James Webb Space Telescope ) தொலைநோக்கி.

1969 இல் அமெரிக்கா நிலாவுக்கு மனிதனை அனுப்பிய காலத்தில் தனது மொத்த வரவு - செலவு அறிக்கையில் 4.5 விழுக்காட்டை  நாசாவுக்கு ஒதுக்கியிருந்தது. இப்போது அது 0.5 விழுக்காடாகக் குறைந்துவிட்டது.

இருந்தும் உலகில் வேறெந்த நாட்டையும் விட அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சிக்குக் கோடிக்கணக்கான பணத்தைச் செலவழிக்கிறது.   இந்த ஆண்டு (2018) மட்டும் நாசா  $19.1 பில்லியன்  (ஒரு பில்லியன் 100 கோடி) செலவழித்துள்ளது. அடுத்த ஆண்டுக்கு  $21.546 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை அடுத்து சீனா விண்வெளி ஆராய்ச்சிக்கு $6,111 மில்லியன்,  உருசியா $5,265 மில்லியன், யப்பான் $3,597 மில்லியன், பிரான்ஸ் $2,713 மில்லியன், ஜெர்மனி $1, 687 மில்லியன், இத்தாலி $1,223 மில்லியன், இந்தியா $1,159 மில்லியன், கனடா $474 மில்லியன், ஐக்கிய இராச்சியம் $367 மில்லியன் செலவழிக்கின்றன.   

வியாழ கோள்

நாசா, ஓகஸ்ட் 05, 2011 அன்று  வியாழகோளை ஆய்வு செய்ய புளோரிடா மாநிலத்தில் உள்ள கேப் கார்னிவல்  விமானப்படை ஏவுதளத்தில் (Cape Canaveral Air Force Station) இருந்து ‘யூனோ’ என்ற ஆளில்லா விண்கலத்தை விண்ணில் ஏவியது.  இதற்கான செலவு  $110 கோடி.  நன்கு திட்டமிட்டு 5 ஆண்டுகளுக்கு முன் ஏவப்பட்ட யூனோ விண்கலம்   170 கோடி மைல்கள் (270 கோடி கிமீ) பயணம் செய்து  வெற்றிகரமாக வியாழ கோளின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்து அதனைச் சுற்றிவரத் தொடங்கியது.  அது வியாழ கோளினது தோற்றம்,  பரிணாம வளர்ச்சி, காந்தவயல், தண்ணீர், வழிமண்டலம் போன்றவற்றை ஆய்வு செய்தது. இதிகாசங்களின்படி யூனோ உரோமர்களது தேவி ஆவாள்.  சனியின் மகளாவாள். வியாழனின் மனைவி ஆவாள்.

ஞாயிறிலிருந்து  5 வது  இடத்தில் ஒள்ள  வியாழன் (Jupiter) ஞாயிறு மண்டலத்திலேயே மிகப்பெரிய கோள் ஆகும்.  ஞாயிறு  மண்டலத்தின் உட்கோள்களான புதன், வெள்ளி, புவி, செவ்வாய் ஆகிய பாறைக் கோள்களைப் போன்றில்லாது, புறக்கோள்களில் ஒன்றான வியாழன் ஞாயிறைப் போல் வாயுக்கள் திரண்ட கோளமாகும்.

சூடான பாறையும், திரவ உலோகம் சிறிதளவு உட்கரு கொண்டிருந்தாலும் மேல்தளத்தில் திரட்சியான திடப்பொருள் எதுவும் வியாழனில் இல்லாமை குறிப்பிடத்தக்கது.

பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணி நேரமாகும் போது, மிகப்பெரிய வடிவம் கொண்ட வியாழன் 9 மணி 50 நிமிடத்தில், அதாவது வினாடிக்கு 8 மைல் வேகத்தில் வெகு விரைவாகத் தன்னைத்தானே சுற்றி விடுகிறது.

வியாழன் தனது சுற்றுப்பாதையில் சுமார் 484 மில்லியன் மைல்  தொலைவில், ஞாயிறை 12 பூகோள ஆண்டுகளுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது.  புவிக்கும் ஞாயிறுக்கும் இடையில் உள்ள தொலைவை விட இது ஐந்து மடங்கு கூடியது ஆகும். அதன் விட்டம்  88,846 மைல்களாகும். ஈர்ப்பு சக்தி புவியை விட இரண்டரை மடங்காகும்.

யூனோ அமெரிக்க நேரப்படி,  04-07-2016  இரவு 11.53 மணியளவில்  வியாழனுக்குள் நுழைந்த சாதனையை  நாசா வானியலாளர்கள்  மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

செவ்வாய்க் கோள்

வியாழ கோளை ஆராய்வதற்கு ஆளில்லாத விண்கலத்தை அனுப்பிய நாசா இரண்டு ஆண்டுகள் கழித்து  ‘இன்சையிட்’ (InSight) என்ற விண்கலத்தை செவ்வாய்க் க கோள் நோக்கிக்  கடந்த மே 05 ஆம் நாள்  கலிபோனியாவில் உள்ள வன்டன்பேர்க் விமான தளத்தில் (Vandenberg Air Force Base in California May 5) இருந்து அனுப்பியது. அது ஏழுமாதம் கழித்துச்  செவ்வாய்க் கோளில் தரை இறங்கியுள்ளது. தரையிறங்கிய இடம் Elysium Planitia என்று அழைக்கப்படுகிறது.   இந்த விண்கலம் சுமார் 485 மில்லியன் கிமீ தூரத்தைக் கடந்து செவ்வாய்க்  கோளின் சுற்றுவட்டப்பாதைக்குள்  முதலில் பயணித்துப் பின்னர்   அதன் வேகம் குறைக்கப்பட்டு வான்குடை  மூலம் தரையிறங்கியது. 

செவ்வாயின் விட்டம் புவியின் விட்டத்தின் அரைப்பங்கு அளவு கொண்டது. இதன் அடர்த்தி புவியைக் காட்டிலும் குறைவானது. செவ்வாய் புவியின் கனவளவின் 15% க்குச் சமமான கனவளவையும், புவியின் திணிவின் 11%க்குச் சமமான திணிவையும் கொண்டது. இதன் மேற்பரப்பின் பரப்பளவு, புவியின் உலர் நிலப்பகுதியின் பரப்பளவைக் காட்டிலும் சற்றே குறைவானது. செவ்வாய் புதன் கோளிலும் பெரியதும் திணிவு கூடியதும் ஆகும். ஆனால், புதன், செவ்வாயிலும் கூடிய அடர்த்தி கொண்டது.  செவ்வாய்  ஞாயிறில் இருந்து  நான்காவது  (புவி மூன்றாவது) இடத்தில் காணப்படுகிறது.  

முதன் முதலில் வரலாற்றுக் குறிப்பில் பதிவு செய்யப்பட்ட காலம்  கிமு 2 ஆம் நூற்றாண்டு. பதிவு செய்தவர்கள் எகிப்திய வானியல் அறிஞர்கள்.

செவ்வாய்  ஞாயிறை ஒருமுறை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் காலம் 779.96  நாட்கள். தன்னைத்தானே சுற்ற எடுக்கும் காலம்  24 மணி 37  மணித்துளிகள்.  ஆகவே புவியைப் போலவே அங்கும் இரவு பகல் மாறிமாறி உண்டாகும்.  புவியின் நிலப்பகுதியும் (Land mass) செவ்வாய்க் கோளின் நிலப்பகுதியும் கிட்டத்தட்ட சமம் ஆகும். அதன் ஆரம் 3,390 கிமீ.  ஞாயிறு குடும்பத்தில் இருக்கும் மலைகளிலேயே மிக உயரமான மலை செவ்வாய்க் கோளில்தான் உள்ளது.  அதன் பெயர்  ஒலம்பஸ் மோன்ஸ் (Olympus Mons), உயரம்  21 கிமீ. புவிக்கும் செவ்வாய்க் கோளுக்கும்  இடையில் உள்ள தொலைவு  54.6 மில்லியன் கிமீ.

செவ்வாய் ஞாயிறு  குடும்பத்தில் மாபெரும் தூசி புயல்களை உள்ளடக்கிய து.   உரோமானியர் அதன் சிவப்பு நிறம் காரணமாக  தங்களது போர்க் கடவுளின் பெயரைச்  சூட்டினார்கள். 

இதற்கு முன்னர்  உள்நோக்கு    உட்பட செவ்வாய்க் கோளை ஆராய நாசா ஏழு முறை வெற்றிகரமாக விண்கலங்களை இறக்கியுள்ளது.  ஒருமுறை மட்டும் அது தோல்வியில் முடிந்தது.  கியூரியோசிட்டி என்ற  விண்கலத்தை Cape Canaveral என்ற இடத்தில் இருந்து  நொவெம்பர் 26, 2011 இல் அனுப்பி வைத்தது. அந்த விண்கலம் ஓகஸ்ட் 6, 2012 இல்  Aeolis Palus in Gale Crater  என்ற இடத்தில்  தரையிறங்கியது. எனவே   செவ்வாயில் தரையிறக்கப்பட்ட உள்நோக்கு  இரண்டாவது விண்கலமாகும்.  செவ்வாய்க் கோள் குறித்த ஆராய்ச்சியை நாசா அமைப்பு 1976 ஆம் ஆண்டு முதல்  மேற்கொண்டு  வருகிறது.

இந்த முறையும் நாசா வானியலாளர்கள்  தூரநோக்கு  வெற்றிகரமாகத் தரை இறங்கியதை அறிந்து ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து அக மகிழ்ந்தனர்.

விண்ணில் இருந்து  தனது வேகத்தைக் குறைத்து வான்குடை வழியாக செவ்வாயின் தரையில் இறங்க 7 மணித்துளிகள் பிடித்தது. இந்த  ஏழு மணித்துளி நேரத்தின் போது   நாசா வானியலாளர்கள் பல்லைக்கடித்த வண்ணம் பதட்டத்தில்  இருந்தனர்.

இந்த உள்நோக்கு விண்கலத்தை உருவாக்க ஏற்பட்ட செலவு  $850 மில்லியன் ஆகும். 

செவ்வாய்க் கோளில்  உண்டாகும் அதிர்வுகள், வெப்பப் பரிமாற்றங்கள் மற்றும் நிலப்பரப்பின் அமைப்பு போன்றவற்றை ஆராயும் பொருட்டு இந்த விண்வெளி ஓடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா? என்பதற்கு விரைவில் விடை கிடைக்கும் என நாசா  நம்புகிறது.  உள்நோக்கு தனது 6அடி (1.6 மீட்டர்) நீளமுள்ள  எந்திரக் கைகளால் செவ்வாய்த் தரையில் 16 அடி (5 மீட்டர்) ஆழமான குழியைத் தோண்டி  அதனைப் பகுப்பாய்வு செய்ய இருக்கிறது.

தரையிறங்கிய சில மணித்துளிகளில் இன்சைட் விண்கலம் முதல் படத்தை நாசா கட்டுப்பாட்டு  அறைக்க்கு அனுப்பி வைத்தது. ஞாயிறு வெப்பத்தில் இயங்கும் இந்த விண்கலம் முழுமையாகத் தொழிற்பட 3 -4 மாதங்கள் ஆகும்.  அது தனது ஆராய்சியை நொவெம்பர் 24, 2020 வரை  நடத்த இருக்கிறது.

உள்நோக்கு செவ்வாயில் தரையிறங்கும் நேரத்தில் முதல் புகைப்படத்தை எடுத்தது. இந்தப் படம் அதன்  கீழ் பகுதியில் இருக்கும் புகைப்படக் கருவி மூலம் எடுக்கப்பட்டது. செவ்வாயில் இன்சைட் இறங்கும் போது எப்படிப் புழுதி பறக்கும், எப்படிக் காற்று வீசும், மண் எப்படி நகர்ந்து செல்லும் என்பன  இந்தப் புகைப்படம் மூலம் தெளிவாகியுள்ளது.

உள்நோக்கு விண்கலம் செவ்வாயில் தரையிறங்கியது பற்றிய செய்திகளை ஒரு சில தமிழ் ஊடகங்களே வெளியிட்டுள்ளன. செய்தியின் பின்னணியில் ஆய்வரங்கம்  நடத்துபவர்களும் இந்த தரையிறக்கம் பற்றி மூச்சே விடவில்லை. இதற்குத் தமிழர்களுக்கு அறிவியல் மனப்பான்மை இல்லாது இருப்பதே காரணமாகும்.  செவ்வாய்க் கோள் பற்றித் தெரிந்து வைத்திருப்பது சாதகத்தில் ஏழில் செவ்வாய் என்றால் பெண்ணுக்குத்  தோசம், திருமணம் ஆகாது என்ற கண்டு பிடிப்பு மட்டுந்தான்.

தமிழர்களின் அறிவியல் பற்றிக் கேட்டால்

2,000 ஆண்டுகளுக்கு முன்னர் கரிகால் சோழன் கட்டிய கல்லணை, இராசராசன் கற்களே அரிதான காவிரி ஆற்றங்கரைகளில் 66 மீ உயரம், 15 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெரிய கோயில், கொல்காப்பியம், திருக்குறள்,   இவற்றைத்தான் எடுத்துக் காட்டுகிறார்கள்.