Jun 21

பூர்வ குடியினரைக் குடிவரவாளர்கள் எனக் குறிப்பிட்ட கனேடிய ஆளுனர் நாயகம்- தவறுக்கு மன்னிப்புக் கோரினார்.

கனேடிய ஆளுனர் நாயகம் டேவிட் ஜோன்ஸ்டன் கனேடிய வானொலி ஒன்றிற்கு வழங்கிய செவ்வி ஒன்றின்போது, கனடாவின் பூர்வ குடிகளைக் “குடிவரவாளர்கள்” எனக் குறிப்பிட்டார்.

கடந்த சனிக்கிழமை CBC வானொலியில் ஒலிபரப்பான இந்தச் செவ்வியின் போது, கனடா எவ்வகையான நாடு என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர் “கனடா குடிவரவை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாடு எனவும், எமது பூர்வீகக் குடிகளும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவிற்கு குடிபெயர்ந்த குடிவரவாளர்களே” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இவரது இந்தக் கருத்து பலமான கண்டன்ங்களுக்கு உள்ளாகியமையை அடுத்து அவர் தனது Twitter சமூக வலைத்தளத்தில் தனது தவறான கருத்திற்கு மன்னிப்புக் கோரியதுடன், பூர்வீகக் குடிகள் குடிவரவாளர்கள் அல்ல அவர்களே இந்நாட்டின் மூலக் குடிகள் எனவும் தெரிவித்துள்ளார்.