Jun 21

பெற்றோர் பேரன் பேத்தி ஆகியொரை வரவழைக்கும் குலுக்கல் முறை 2017- இரண்டாவது சந்தர்ப்பம் ?

2017 ஆம் ஆண்டில் தங்கள் பெற்றோர்,  பேரன் பேத்தி ஆகியோரைக் கனடாவிற்கு வரவழைக்கும் பொருட்டு விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த 95,000 பேர்களில் இருந்து 10,000 பேர் குலுக்கல் முறை மூலம் தெரிவு செய்யப்பட்டனர்.

பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களையும், ஆவணச் சான்றுகளையும் இதற்கான இறுதித் திகதியான ஜூலை 24 இற்கு முன்னதாகச் சமர்ப்பிக்குமாறு கனேடியக் குடிவரவுத்திணைக்களம் இவர்களை அறிவுறுத்தியது. சென்றவாரம் வரை ( ஜுன் 8 வரை) 700 பேர்களிடமிருந்தே பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களும், தொடர்பான ஆவணச் சான்றுகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக  கனேடியக் குடிவரவுத்திணைக்களம் தெரிவித்துள்ளது. இவற்றுள் 15 % ஆனவை  அதாவது 105 விண்ணப்பங்கள் பூரணப்படுத்தப்படாதவை எனவும் அறியவந்துள்ளது.

 பேரன் பேத்தி ஆகியோரைக் கனடாவிற்கு வரவழைக்கத் தயார் நிலையில் இருந்த பலர், குலுக்கல் மூலம் விண்ணப்பங்களைத் தெரிவு செய்யும் திட்டம் திடீரென அறிமுகம் செய்யப்பட்டதால் ஏமாற்றமும் விரக்தியும் அடைந்தனர். இப்புதிய திட்டத்தின் அறிமுகம் பற்றி எதுவித முன்னறிவித்தலும் கொடுக்கப்பட இல்லை எனவும் குடும்ப மீளிணைவு குலுக்கல் மூலம் தீர்மானிக்கப்படுவது நகைப்புக்குரியதொன்றாகும் எனவும் பலரால் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

மேற்குறிப்பிட்ட இக்காரணங்களை முன்வைத்து கனேடியக் குடிவரவு அமைச்சரிடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதியான ஜூலை 24 இற்கு முன்னர் 10,000 விண்ணப்பதாரிகளிடமிருந்தும் இறுதி விண்ணப்பங்கள்

கிடைக்கப்பெறாதவிடத்து,  குடிவரவுத் திணைக்களம் தெரிவு செய்யப்படாத 85,000 விண்ணப்பதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்களைக் கோரக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.