Jun 20

போர்த்துக்கல் காட்டுத் தீ: 1000 தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்தும் பணியில்

போர்த்துக்கல்லில் தொடரும் காட்டுத் தீயை கட்டுக்கு கொண்டுவரும் நோக்கில், சுமார் 1000 தீயணைப்பு படைவீரர்கள் தொடர்ந்தும் போராடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வார இறுதி நாட்களில் பரவ ஆரம்பித்த இந்த காட்டுத் தீயினால் இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளதுடன் பாரிய அளவான நிலப்பரப்பு கருகி சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலைமையால், இதுவரை 70 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் குறைந்தது 13 தீயணைப்பு படைவீரர்கள் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், பாரிய மரம் ஒன்றில் ஏற்பட்ட மின்னல் தாக்கம் காரணமாகவே குறித்த தீ பரவியிருக்கக் கூடும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், போர்த்துக்கல்லில் நிலவி வரும் கடும் வெப்பம் மற்றும் காற்று என்பன இந்த காட்டுத் தீ மேன்மேலும் பரவக் காரணமாக அமைந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த காட்டுத் தீ வேறு காரணங்களால் பரவியிருக்கலாமோ என்பதை கண்டறியும் பொருட்டு விசாரணை நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.