Nov 26

"தமிழ்மொழி வரலாற்றில் ஈழத்தின் பங்களிப்பு:- வி.இ.குகநாதன்…"


பொதுவாக தமிழ்மொழி வரலாற்றில் மொழி வளர்ச்சிக்கான பங்களிப்புப் பற்றிப் பேசப்படும் போதெல்லாம் தமிழகத்தை மட்டுமே கவனத்திற்கொண்டு பேசப்படும் ஒரு நடைமுறையே காணப்படுகின்றது உண்மையில் ஈழமும் தமிழ்மொழி வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்களவு பங்கினை வகித்துள்ளது அத்தகைய அதிகம் பேசப்படாத ஈழத்தின் பங்களிப்பு பற்றிய ஒரு பார்வையாகவே இக் கட்டுரை அமைந்துள்ளது.

சங்க காலத்தில் ஈழத்தின் தமிழ்ப் பங்களிப்பு:

சங்க இலக்கியங்களிற்கே ஈழத்தைச் சேர்ந்த சங்ககாலப் புலவரான`ஈழத்துப் பூதன்தேவனார்`ந்தொகை 189, 343, 360, நற்றிணை 366 ஆகிய ஏழு பாடல்களை இவர் பாடியுள்ளார். இவரது பாடல்கள் மன்னர்களின் பெருமைகளை மட்டும் பேசுவதாக அல்லாமல்; பாலை, குறிஞ்சி போன்ற திணைகளையும் , வானியலையும் , விலங்கினங்களையும் குறித்து இருப்பது ; இவரது பாடல்களின் சிறப்பியல்பாகவும் இவரது ஈழத்து இருப்பிடத்தையும் சான்றுபடுத்துவதாகவுள்ளது. அகநானூற்றுச் செய்யுளில் இவர் பசும்பூண் பாண்டியனை பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

“செல்சமங்கடந்த செல்லா நல்லிசை

விசும்புஇவர் வெண்குடைப் பசும்பூண் பாண்டியன்

பாடுபெறு சிறப்பிற் கூடல்” (அகம்.231: 10-13).

இப் பாடலைக்கொண்டு ஈழத்துப் பூதன்தேவனாரின் காலத்தை பொது ஆண்டு 2ம் நூற்றாண்டு (CE 2nd cent) எனக் கணிக்கலாம் (பசும்பூண் பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனுக்கு முன்பு இருந்த அரசன்). மேலும் பொது ஆண்டிற்கு முற்பட்ட காலத்திலேயே `தமிழி` எழுத்துக்கள் ஈழத்தில் கிடைத்துள்ளன. இலங்கை திசமகாராமையில் அகழ்வில் கண்டுபிடிக்கப்பட்ட கறுப்பு-சிகப்பு மட்பாண்ட த்தில் ;காணப்பட்ட எழுத்துக்கள் (BCE 2nd cent) காலத்தைச் சேர்ந்ததாக செருமனிய அறிவியலாளர் குறிப்பிடுகின்றார்{1}. மேலும் இலங்கை அறிஞர்கள் பரனவிதான,கருணாரத்னா, பெர்ணான்டோ, மற்றும் அபயசிங்கி ஆகியோர் அசோகர் பிராமிக்கு முன்பே, பண்டைய தமிழி எழுத்து, தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு வந்துவிட்டது என்ற கருத்தை தெரிவித்துள்ளனர். “ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்…” எனப் பட்டினப்பாலை பாடுகின்றது {2}. இலங்குவதால் `இலங்கை` என்ற பெயரும், தமிழ்நாட்டிலிருந்து கீழே இறங்கியிருப்பதால் `ஈழம்` (இழிவு  ஈழ்  ஈழம்) என்ற பெயரும் ஏற்பட்டதாகவும் ,இலங்கை, ஈழம் ஆகிய சொற்கள் சங்கத் தமிழ்ச் சொற்களாகக் காணப்படுவதாகவும் அறிஞர்கள் கூறுவதும் கவனத்திற்கொள்ளத் தக்கது. மேலே கூறப்பட்ட சங்க கால ஈழத் தொடர்புகள் சங்ககாலத்திலிருந்தே ஈழம் தமிழ் மொழிக்கு ஆற்றிய பங்களிப்புகளிற்குச் சான்றாக அமைந்துள்ளன. இன்று தமிழகத்தில் கூடப் பெருமளவிற்குப் பயன்பாட்டில் இல்லாத பல சங்ககால தமிழ்ச்சொற்கள் (கமம் ,வெளிக்கிடு, வளவு, திகதி(திகழ்தி),உவன்…. ) இன்றும் ஈழத்தில் பொதுப் பயன்பாட்டிலிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மணிமேகலையில் ஈழம்:

இரட்டைக் காப்பியங்களில் ஒன்றாகவும், ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாகவும் கருதப்படும் மணிமேகலை ஈழத்திலுள்ள சில ஊர்களைக் குறிப்பிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. மணிமேகலை ஈழத்தில் பாதை தெரியாமல் அலைந்த இடம் அனலைத் தீவு எனவும், பீடீகை கண்டு பிறப்புணர்ந்த இடம் தற்போதைய நயினாத் தீவு (மணிபல்லவத் தீவு) எனவும், அட்சயபாத்திரம் பெற்ற; இடம் தற்போதைய கந்தரோடை (தீவதிலகை) எனவும் அறிஞர்களால் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

அகரமுதலி- நிகண்டு பங்களிப்பு:

ஒரு மொழியின் வளர்ச்சியில் அகரமுதலி/ அகராதி என்பது சிறப்பிடம் பெறும். இந்த வகையில் தமிழ் அகரமுதலிகளிற்கு முற்பட்டவை நிகண்டுகள். இங்கு நிகண்டு என்பது ஒரு சொல்லின் ஒத்த சொல்லைத் தருவதாகக் காணப்பட, அகரமுதலி என்பது ஒரு சொல்லிற்கான விளக்கத்தைத் தருவதாக அமையும்.பல்வேறு நிகண்டுகளில்` நீரரர் நிகண்டு` என்பது ஈழத்தமிழரான க. தா. செல்வராசகோபால் (ஈழத்துப் பூராடனார்) என்பவரால் எழுதப்பட்டது.

இந்த ஈழத்துப் பூராடனார் தமிழ்மொழி, கலை தொடர்பாக 250 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நீரரர் நிகண்டு ஒப்பீட்டுரீதியில் குறைந்தளவு வடமொழிச்சொற்களையும், பெருமளவிற்கு தமிழ்ச்சொற்களையும் கொண்டுள்ள மிகச்சில நிகண்டுகளில் ஒன்றாகும். அகரமுதலிகளைப் பொறுத்தவரையில் `பெயரகராதி` – யாழ்ப்பாண நூற் கழகம் (1842), `மானிப்பாய் அகராதி` – யாழ்ப்பாணம் அ. சந்திரசேகர பண்டிதர், சரவணமுத்துப் பிள்ளை (1842),`ஆங்கில தமிழ் அகராதி` – அமெரிக்கன் மிசன், யாழ்ப்பாணம்(1852),; `தமிழ்ப் பேரகராதி` ;– யாழ்ப்பாணம் நா. கதிரவேற்பிள்ளை(1899) என்பவை ஈழத்தமிழர்களின் ஆக்கங்களாகும்{3}. இவற்றுக்கிடையே கதிரவேற்பிள்ளையின் தமிழ்ப் பேரகராதி பல்வேறு படிமலர்ச்சிகளைக் கண்டு தமிழ்மொழியில் முதன்மையானதாக விளங்குகின்றது.

தமிழ்ப்பதிப்புலகில் ஈழத்து முன்னோடிகள்:

பழந்தமிழ் நூல்களை ஒலைச் சுவடிகளிலிருந்து அச்சுப்பதிப்பில் கொண்டுவந்து காலகாலத்திற்கும் கிடைக்கச்செய்தமை அரும்பெரும் தமிழ்த் தொண்டாகும்.

இச் சேவையினைக் குறிக்கும் போதெல்லாம் பெருமளவிற்குப் பேசப்படுபவர் தமிழகத்தைச்சேர்ந்த தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே.சா ஆவார். இவரைப் போன்றே ஈழத்திலிருந்தும் சி.வை.தா, நாவலர் ஆகிய இருவரும் ஒலைச்சுவடிகளை தமிழ் அச்சுப்பதிப்பில் நூல்களாகக் கொண்டுவருவதில் பெரும் பங்காற்றியுள்ளார்கள்.

தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடியான சி.வை.தா (சி. வை. தாமோதரம்பிள்ளை) 1853 ஆம் ஆண்டு நீதிநெறி விளக்கம் என்னும் ஒழுக்க நெறி சார்ந்த தமிழ் நூலொன்றைப் பதிப்பித்ததன் மூலம் நூல் வெளியீட்டுத் துறையில் காலடி எடுத்துவைத்தார். இவரது அரும்பணி என்பது தொல்காப்பியப் பொருளதிகாரத்தை கடும் உழைப்பிற்கு மத்தியில் தேடி எடுத்துப் பதிப்பித்தமையாகும். பாண்டிய மன்னன் கைகளுக்கே அகப்படாததாக அன்று இழக்கப்பட்டதாய் கருதப்பட்டு வந்த தொல்காப்பியப் பொருளதிகாரத்தை பதிப்பித்தமை ஒரு பெருஞ்செயலேயாகும் {4}. இவரது உழைப்பு இல்லாதிருக்குமாயின் தொல்காப்பிய பொருளதிகாரம் எமக்குக் கிடைக்காமலே போயிருக்கக்கூடும். பின்னரான காலப்பகுதியில் தொல்காப்பிய வல்லுநரான தமிழறிஞர் முதுமுனைவர் புலவர்.இரா.இளங்குமாரனார் தொல்காப்பிய பொருளதிகாரத்தை தமிழகத்தில் எங்கும் தேடிக்கிடைக்காமல், ஈழத்திற்கு வந்து சுண்ணாகம் திருமகள் அழுத்தகத்திலேயே பெற்றுப் பின் தமிழகம் கொண்டுபோய்ச் சேர்த்துள்ளார். மேலும் சி.வை.தா சூளாமணி, வீரசோழியம், இறையனார் அகப்பொருள், தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கான நச்சினார்க்கினியருரை, தொல்காப்பிய எழுத்திகாரத்திற்கான நச்சினார்க்கினியருரை, கலித்தொகை, இலக்கண விளக்கம், திருத்தணிகைப் புராணம் ஆகிய தொன்மையான தமிழ் இலக்கியங்களையும் பதிப்பித்திருந்தார். அத்துடன் சொந்தமாகவும் பல நூல்களை (கட்டளைக் கலித்துறை, வசன சூளாமணி, ஆறாம் வாசகப் புத்தகம், ஏழாம் வாசகப் புத்தகம்…) எழுதியும் தமிழிற்குத் தொண்டாற்றியிருந்தார்.

ஈழத்தைச் சேர்ந்த ஆறுமுக நாவலர் என்பவரும் தமிழ்ப் பதிப்புலக முன்னோடிகளில் ஒருவர். இவர் தமிழகம், ஈழம் ஆகிய இரு தமிழ் நிலங்களிலுமே பதிப்பகப் பணியினை மேற்கொண்டிருந்தார். இவர் பல தமிழ் நூல்களைப் பதிப்பிருந்தபோதும் அவற்றினுள் திருக்குறள் பரிமேலழகருரை, நன்னூற் காண்டிகை, திருமுருகாற்றுப்படை போன்ற இலக்கிய, இலக்கண நூல்களும் திருவிளையாடல் புராணம், பெரியபுராணம் , திருவாசகம்போன்ற மத நூல்களும் முதன்மையானவை (இவை பிழையின்றிப் பதிப்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது). பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்த முன்னோடிகள் மூவரில் இருவர் ஈழத்தைச் சேர்ந்தவர்களாகவிருப்பது ஈழத்தின் பதிப்புலகப் பங்களிப்பினை எடுத்துக்காட்டுவதாகவுள்ளது.

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு :

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை தொடக்கி அதன் முதல் நான்கு மாநாடுகளை வெற்றிகரமாக நடாத்தி முடித்தவர் தனிநாயகம் அடிகள் (Rev. Xavier S. Thani Nayagam) என்ற ஈழத்தமிழராவார்.

முதல் மாநாடு கோலாலம்பூரிலும், இரண்டாவதனை சென்னையிலும், மூன்றாவதனை பாரிசிலும் (பிரான்சிலும்) மிகச் சிறப்பாக நடாத்திமுடித்திருந்தார். நான்காவது மாநாட்டினை யாழ்ப்பாணத்தில் நடாத்த பெருமளவில் ஏற்பாடு செய்து முடித்திருந்தார். மாநாடும் கருத்தரங்குகளும் நிறைவேறிய மறுநாள், தை 10 ஆம் நாள், பரிசளிப்பும் விருந்தினருக்கு பாராட்டு நிகழ்வுகளும் செய்ய ஒழுங்கான பொதுக்கூட்டத்தில் சிங்கள காவல்துறையினரும் குண்டர்களும் பொதுமக்களைத் தாக்கியதில் 11 பேர் கொல்லப்பட்டனர். இந்த இன்னலினை மனதிற் சுமந்திருந்த அடிகளார் சிறிது காலத்திலேயே நோய்வாய்ப்பட்டு இறந்திருந்தார். அதற்குப் பின் 5 உலகத் தமிழர் மாநாடுகள் நடைபெற்றபோதும், அவை எதுவுமே முதல் நான்கு மாநாடுகள் அளவிற்குச் சிறப்பாக அமையவில்லை. இதிலிருந்து முதல் நான்கு மாநாடுகளை நடாத்துவதில் அடிகளார் காட்டிய அளப்பெரிய உழைப்பினையும், அவரது ஆளுமைத் திறனையும் அறிந்து கொள்ளலாம். பத்தாவது மாநாடு அடுத்த ஆண்டு (2019)அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடாத்தப்படவிருக்கின்றது. அடிகளார் `தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்` (Academy of Tamil Culture), `உலகத் தமிழாராய்ச்சிக் கழகம்` (International Association for Tamil Research, IATR) என்பவற்றையும் தோற்றுவித்திருந்தார்.மேலும் பல்வேறு இதழ்கள்,புத்தகங்கள் மூலம் தமிழ்மொழியின் சிறப்புக்களை முதன்முதலில் ஐரோப்பியர்களிடம் ஐரோப்பாவிற்கே கொண்டுபோய்ச் சேர்ந்த பெருமை அடிகளாரையே சேரும்.

மேற்கூறியவகைகளில் ஈழமும் சங்ககாலம் முதல் இன்றுவரை தமிழிற்கு அரிய பங்களிப்பினை வழங்கியே வந்துள்ளது. இன்றைய நிலையில் தமிழகம்,ஈழம் என்பவற்றையும் தாண்டி, தமிழ்மொழிக்கான பங்களிப்பு உலகளாவியரீதியில் காணப்படுகின்றமை நாம் எல்லாம் பெருமைப்படவேண்டிய ஒரு விடயமாகவேயுள்ளது.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்”.