Nov 21

போலிக் கடிதம் தொடர்பில் சி.ஐ.டியில் முறைப்பாடு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கடமையிலிருந்தும் பொறுப்பிலிருந்தும் தவறியுள்ளார் என்பதை சுட்டிக்காட்டி பிரதம நீதியரசர் நளின் பெரேராவிற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய கடிதமொன்றை அனுப்பி வைத்ததைப் போன்று வெளியான கடிதம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பரவிய அக்கடிதத்தில்,

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி பாராளுமன்றில் பெரும்பான்மையை பெற்ற புதிய பிரதமரையும் அமைச்சரவையையும் நியமித்திருக்க வேண்டும்.

ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறினே அதற்கான நடவடிக்கையை எடுக்க தவறிவிட்டார். அரசியல் யாப்பின் 37.2ஆவது சரத்தின் படி ஜனாதிபதி தனது பொறுப்பை நிறைவேற்றாத பட்சத்தில் பிரதம  நீதியரசரின் துணையுடன் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மற்றும் பாதுகாப்பு படையின் கட்டுப்பாடு சபாநாயகருக்கு உரித்தாக்கப்படும் என்ற ஏற்பாடு சபாநாயகரின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் குறித்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியின் இயலாமை தொடர்பாக பெரும்பான்மை கருத்தை அறியுமாறும் பிரதம நீதியரசரிடம் கோரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் சபாநாயகர் காரியாலயம் அவ்வாறானதொரு கடிதம் அவசியமில்லை, நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டால் சபாநாயகரே அதிகாரம் மிக்கவர் என அரசியலமைப்பில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அந்த கடிதத்தை எங்கிருந்து யார் அனுப்பியது தொடர்பாக எந்த விடயமும் எங்களுக்கு தெரியாது.

ஆனால் சமூக வலைத்தளங்களில் சபாநாயகர் பிரதம நீதியரசருக்கு கடிதம் எழுதியதாக தகவல் வைரலாக பரவியுள்ளதாக அறிய கிடைத்தது. என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த போலிக் கடிதம் தொடர்பாக சபாநாயகரின் ஆலோசனையின் பெயரில் பாராளுமன்ற பொதுச் செயலாளரே குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.