Nov 21

இலங்கை சமூகத்தில் பாடசாலைகளில் மாணவர்கள் இடைவிலகலும் அதற்கான தீர்வும்

“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவனுக்கு மாடல்ல மற்றையவை”

என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க கல்வியின் முக்கியத்துவமானது ஒருவனுக்கு நாளடைவில் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. பொருளாதார ரீதியாக நம் நாட்டிற்கு பெரும் பங்களிப்பை செலுத்தி வரும். மலையக சமுதாயம் இன்று கல்வி என்ற தொனிப்பொருளில் பின்னடைவை எதிர்நோக்கி வருகின்றது. கல்வித் துறையில் இன்று எமது நாடு பல சவால்களுக்கு முகங்கொடுக்கிறது. .கல்வி ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு உந்து சக்தி ஆகிறது. அதுவும் நாட்டை பொருத்தமட்டில் பிரதான தேவையாக உள்ளது. கல்வியில் இன்று மாற்றம் ஏற்பட்டு வருகின்றது எனக் கூறப்பட்ட போதிலும் அது குறித்ததொரு வட்டத்துக்குள்ளேயே முடங்கியிருக்கிறது.

இன்று இலங்கை சமூதாயத்தின் கல்வித்தர மேம்பாட்டை பாதிக்கும் பல்வேறு காரணிகளில் “இடைவிலகல்” என்பது மூலக் காரணமாக உள்ளது. இன்றையக் காலத்தில் இலவசக் கல்வி வழங்கப்படுகின்ற போதும் இடைவிலகலானது எமது சமூகத்தை சூழ்ந்தே காணப்படுகின்றது. இடைவிலகுவதனால் பல்வேறுவிதமான பாதிப்புக்கு சமூகம் உள்ளாகின்றது. இலங்கை கல்வியில் தேறியநிலைக் காணப்பட்டாலும் எழுத்தறிவு வீதத்தில் மட்டுமன்றி பல்கலைக்கழக அனுமதிவீதம், மாணவர் சேர்வு வீதம் என்பவற்றிலும் குறைந்தளவிலேயே முன்னேற்றம் காணப்படுகிறது. அத்தோடு பாடசாலை செல்லாத மாணவர்களின் வீதம், தரம் ஐந்துவரை மாத்திரம் பாடசாலை செல்லும் மாணவர்கள் வீதம், தரம் 06-10 வரைபாடசாலை செல்லும் மாணவர்கள் வீதம், சாதாரண மற்றும் உயர்தரத்தில் சித்தியடைந்தோர் வீதம் என்பன அரிதாகவே காணப்படுகின்றது. ஆகவே எமது சமூதாயத்தின் கல்வி வளர்ச்சிக்கு பல்வேறு தடைக்காரணிகள் காணப்பட்டாலும் மிகவும் பிரதானமானதாக இடைவிலகலே இருக்கின்றது.

கல்வியின் வளர்ச்சிக்கு தடைப்போடும் இடைவிலகல் என்பது யாதெனில் “பாடசாலைகளில் சேரும் பிள்ளைகள் ஏதேனும் ஒருகாரணத்திற்காக தனது படிப்பைத் தொடராமல் பாடசாலையை விட்டு நின்று விடுவதனைக் குறிக்கும்.” இன்று 21ஆம் நூற்றாண்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனினும் இன்று வரைக்கும் இலங்கை சமூகம் கல்வியில் பின்னடைந்தே காணப்படுகிறது. இப்பின்னடைவுக்கு இடைவிலகலே பிரதான காரணமாகும் என்பதை யாராலும் மறுக்க இயலாது. இவ் இடைவிலகலுக்கு பல்வேறு காரணிகள் துணைப்போகின்றன.

அதாவது வறுமை, பாலியல் திருமணம், பணஈர்ப்பு, ஆசிரியர் மாணவர் விரிசல், மதுபாவனைமுறை, போக்குவரத்து சிக்கல், வளப்பற்றாக்குறை ஆகியன இடைவிலகலுக்கு துணைநிற்கின்றன. ஏனைய நாடுகளை பார்க்கிலும் எமது நாடானது வறுமை இருள் சூழ்ந்ததாக விளங்குகிறது. இதனால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதிலும் ஒருவேளை உணவு உண்பதிலும் சிக்கல் நிறைந்த வாழ்க்கையை வாழ்கின்றனர். இதன்கண் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாமல் இடைநிறுத்தி விடுகின்றனர். அத்தோடு பாடசாலைக்கு செல்கின்ற மாணவர்கள் (தரம்6,8,11,12) திருமண வயதுக்கு முன்பே ஒருவருக்கொருவர் காதல் வயப்பட்டு படிப்பை இடைவிட்டு திருமணம் செய்துக் கொள்கின்றனர். பணம் என்பது “இறந்த பிணத்தைக்கூட திரும்பிப் பார்க்க வைக்கும்” ஒன்றாகும். இதனடிப்படையில் எமது சமூதாய மாணவர்களும் பணத்தின் மீதுகொண்ட ஈர்ப்பினால் அதனை சீக்கிரம் அடையும் நோக்கில் கல்வியை இடைவிட்டு வேறு செயல்களில் ஈடுபடுகின்றனர்.

மேலும் இலங்கை சமூகத்தை குடிக்கொண்ட மதுபாவனை முறையால் குறித்த மாணவனின் கல்வி, குடும்பம்,சமூகம் என்பனவும் சீரழிகின்றது. குடும்பத் தலைவனின் குடிப்பழக்கத்தைப் பார்த்து பிள்ளையும் அப்பழக்கத்திற்கு அடிமையாகிவிடுகிறான். இதனால் கல்வியில் நாட்டம் இல்லாமல் சென்று மது போதையில் மோகம் அதிகரிக்க பாடசாலைக்கு செல்வதை நிறுத்திவிடுகிறான். போக்குவரத்து சிக்கல் நிலையால் அனேகமானவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை. வீதிகள் கரடுமுரடாகக் காணப்படுவதனாலேயே இவ் இடர்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுவயது மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர் மாணவர் விரிசல் நிலையும் மாணவர் இடைவிலகளுக்கான ஒரு காரணமாகும். அதாவது உயர் அந்தஸ்த்தையுடைய ஆசிரியர்கள் குறித்த சில மாணவர்களிடம் பாரப்பட்சம் காட்டுவதனால் அவர்களுக்கிடையில் விரிசல் ஏற்படுகின்றமையால் மாணவர்கள் கல்வியை தொடராமல் நிறுத்திவிடுகின்றனர். சிலசந்தர்ப்பத்தில் இவ் விரிசல் உடல் ரீதியான தாக்கத்தையும் ஏற்படுத்திவிடுகின்றது. இவ்வாறான பல்வேறு காரணிகள் இடைவிலகளுக்கு துணைபோகின்றன.

சமூகத்தின் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் இவ் இடைவிலகலினால் ஒருவன் தனிநபர்,குடும்பம், சமூகம் என்ற வகையில்; பல சிக்கல்களை எதிர்நோக்குகிறான். தனிநபர் என்ற வகையில் பொருளாதார, சமூக ரீதியாக அவன் பாதிக்கப்படுகிறான். ஒரு சிறந்த தொழில் இல்லாமல் தனது குடும்பத்தைக்கூட பார்த்துக்கொள்ளும் பொருளாதார வசதி இல்லாமல் திண்டாடும் நிலை ஏற்படுகின்றது. அத்தோடு சமூகரீதியில் கல்விகற்ற சிறந்த சமூகத்தில் கீழான நிலையில் வைத்து நோக்கப்படுகிறான். அவனுக்கும் அவனது வார்த்தைக்கும் அங்குமதிப்பில்லை. சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்படுகிறான். குடும்பம் என்றவகையில் திருமணரீதியில் பாதிக்கப்படுகிறான். அதாவது தன்னுடைய தகுதிக்கேற்ற வகையில் அவன் இல்லை, படிக்காதவன், மனைவியை கடைசி வரைக்கும் காப்பாற்ற ஒரு தொழில் இல்லாதவன் போன்றகாரணங்களைகாட்டி ஒரு பெண் அவனை திருமணம் செய்ய மறுக்கக் கூடியவாய்ப்பு உண்டு. அத்தோடு சமூகம் என்ற வகையிலும் மேற்கூறியவாறே சமூக அந்தஸ்து, சமூகப் புறக்கணிப்பு என்பவற்றிற்கே உள்ளாகிறான்;. இதனால் எமது சமூதாயம் கல்வியில் முன்னேற வேண்டுமெனில் இத்தகைய தீங்கு விளைவிக்கும் இடைவிலகளுக்கான காரணிகளை ஒழிக்க வேண்டும். அதாவது வறுமை இருள் சூழ்ந்த குடும்பத்தைச் சேர்ந்தபிள்ளைகள் கல்வியை சுமுகமாகத் தொடர்வதற்கு புலமைப் பரிசில்களை (Scholarship) வழங்க அரசாங்கமும், அரசாங்க அமைச்சர்களும் முன்வர வேண்டும்.


மேலும் பாலியல் திருமணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இல்லையேல் மாணவர்கள் தானாக திருந்தி பாலியல் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்தால் ஓரளவு இடைவிலகளை தவிர்க்கலாம். ஆசிரியர்கள் மாணவர்களிடம் பெற்றோரை போல அன்புடன் பழகுகுவதன் மூலமும், மாணவர்களிடத்தில் ஏற்றத்தாழ்வு, பாரப்பட்சம் காட்டாமல் இருப்பதன் அல்லது குறைத்துக் கொள்வதன் மூலமும் இடைவிலகலை குறைக்கலாம். முடிந்தவரை மதுபாவனை முறைக்கு அடிமையாகும் பிள்ளைகளுக்கு உரிய தண்டனையை வழங்குதல், அறிவுரை கூறுதல் போன்ற செயல்களை செய்தல் வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலமும், ஒவ்வொரு குடும்பத் தலைவனும் பிள்ளையின் கல்வியையும், எதிர்கால வாழ்வையும் கருத்தில் கொண்டு மதுபாவனை முறைக்கு அடிமையாகாது உணர்ந்து செயற்படுவதன் மூலமும் பிள்ளையின் கற்றலை வினைத்திறனாக மேற்கொண்டு இடைவிலகலை குறைக்கலாம், போக்குவரத்து பிரச்சினை சமூகத்தில் அதிகமாகக் காணப்படுவதால் அதனை அரசாங்கமும், அரசாங்க அமைச்சர்களும் சீரமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


வெறுமனே வாய் வார்த்தைகளால் வாக்குறுதிகளை வழங்காது அதை செயலிலும் ஒவ்வொருவரும் காட்ட வேண்டும். எதிர்கால சமூகத் தலைவர்களின் கல்வியை மனதில் நிலைநிறுத்திக் கொண்டு, கரடுமுரடான பாதைகளை சீரமைத்து தரவேண்டும். அவ்வாறு பாதைகள் சீரமைக்கப்பட்டால் மாணவர்கள் பாடசாலைக்கு இலகுவாக செல்லக்கூடிய வாய்ப்புஏற்படும். இதன்போது இடைவிலகளை தவிர்க்கலாம்.இவ்வாறான சிறந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலமே எதிர்காலத்தில் சமூகத்தில் பாடசாலையில் மாணவர்கள் இடைவிலகாமல் கல்வியில் ஏனைய நாடுகளை போல வளர்ச்சிப் பெற்று சிறப்புற்று விளங்கலாம். ஆகவே ஆசிரியர்கள், பெற்றோர்கள், அரசாங்கம் மட்டுமன்றி மாணவர்கள் ஒவ்வொருவரும் தாமாக உணர்ந்து சமூகத்தின் வெற்றியின் பொருட்டும் தனது வெற்றியின் பொருட்டும் செயற்பட வேண்டும்.