Nov 20

பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் விபத்து


காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி இன்று (20) நண்பகல் பயணித்த புகையிரதம் கந்தர்மடம், இந்து மகளிர் வீதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் கடக்க முற்பட்ட காரை மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் காரில் பயணித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

கந்தர்மடம், இந்து மகளிர் வீதியில் காரில் பயணித்த குறித்த வர்த்தகர், பாதுகாப்பற்ற புகையிரத கடவையை இன்று நண்பகல் கடக்க முற்பட்டுள்ளார். அப்போது எதிரே வந்த புகையிரதம் காரை மோதி கந்தர்மடம் அரசடி வீதி வரை இழுத்துச் சென்றுள்ளது. 

இந்த சம்பவத்தில் கார் முற்று முழுதாக சேதமடைந்ததுடன் காரில் பயணித்த யாழ். வர்த்தகரான பாலா என்பவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.