Nov 20

நாடாளுமன்ற சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களிடம் நட்டஈடு!

நாடாளுமன்ற சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த உறுப்பினர்களிடமிருந்து நட்டஈட்டைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


இதுகுறித்து ஆராய்வதற்காக விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஒன்பதாம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டதுடன், ஜனவரி ஐந்தாம் திகதி பொதுத் தேர்தலை நடத்துமாறும் அறிவுறுத்தியிருந்தார்.

இதற்கு எதிராக ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடந்த 12ஆம் திகதி உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்தன.

இந்த மனுவை விசாரித்த மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு, நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு அறிவித்த ஜனாதிபதியின் வர்த்தமானிக்கு டிசம்பர் 7ஆம் திகதி வரையில் இடைக்கால தடையுத்தரவினைப் பிறப்பித்தது.

இடைக்கால தடையுத்தரவினைத் தொடர்ந்து, மறுநாள் 14ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாயின. இதன்போது பிரதமர் மஹிந்த மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டு வாய்மொழி மூலம் நிறைவேற்றப்பட்டது.

இதன்போது, அங்கு குழப்பம் ஏற்பட்டதால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. அதனையடுத்து 15, 16ஆம் திகதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வுகள் பெரும் அமளி துமளியில் முடிவடைந்தது.

இதன்போது, நாடாளுமன்ற கதிரைகள் உடைக்கப்பட்டதுடன், பொது சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில், நாடாளுமன்ற குழப்பத்தின்போது, சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி அறிவித்தார்.

நாடாளுமன்ற சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் விபரங்கள் திரட்டப்பட்டதாகவும், அந்த விபரங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். அதனடிப்படையில், சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய உறுப்பினர்களிடமிருந்து நட்டஈட்டினைப் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக, நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளை பயன்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.