Nov 15

குமாரசுவாமி நந்தகோபனின் 10ஆம் ஆண்டு நினைவுதினம் அனுஷ்டிப்பு

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆரம்ப தலைவரான ரகு என்றழைக்கப்படும் குமாரசுவாமி நந்தகோபனின் 10ஆம் ஆண்டு நினைவுதினம் மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையத்தில் நேற்று (புதன்கிழமை) மாலை இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது நந்தகோபனின் உருவச்சிலை திறந்துவைக்கப்பட்டதுடன் அதற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு தீபம் ஏற்றப்பட்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் தலைவர் நந்தகோபனின் சகோதரர் கு.நளினகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் நா.திரவியம், பிரதித் தலைவர் க.யோகவேள், கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன், மகளிர் அணி தலைவர் செல்வி மனோகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

குமாரசுவாமி நந்தகோபன் கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு அருகிலுள்ள அத்துருகிரிய பிரதேசத்தில் வைத்து இனந்தெரியாதோரினால் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.