Nov 15

நீரிழிவு நோய்: 24 மணி நேர உணவகங்களை தடை செய்ய வேண்டும்!

ஜோர்ஜ் டவுன்,நவ.15- மக்களிடையே அதிகளவில் காணப்படும் நீரிழிவு நோய்ப் பாதிப்பைக் குறைப்பதற்கு நாட்டில் 24 மணி நேர உணவகங்களுக்கு உரிமம் வழங்குவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் (CAP) பரிந்துரை செய்துள்ளது.


பின்னேரத்தில் உணவு உண்ணும் பழக்கத்தினாலேயே ஆண்டுக்கு ஆண்டு நீரிழிவு நோய் எண்ணிக்கை அதிகரித்து வரும் காரணங்களில் ஒன்றாக இருப்பதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகமட் இட்ரிஸ் கூறினார்.

தொழிற்சாலைகளில் இரவு நேர வேலை வழங்குவதால் தான் மக்களுக்கு இந்த பின்னேரத்தில் உணவு உண்ணும் பழக்கம் வந்தது. அதனால், தொழிலாளர்களின் ஆரோக்கியத்தைக் கருதி தொழிற்சாலைகள் இரவு நேர வேலையை நிறுத்திக் கொள்வது சிறப்பு என்றார் அவர்.

ஆசியாவில் ஆக அதிகமான நீரிழிவு நோய் பாதிப்பு இருக்கும் நாடுகளில் ஒன்றாக மலேசியா திகழ்கிறது. அதோடு மட்டுமில்லாமல் உலக அளவிலும் மலேசியாவில் நீரிழிவு நோய்க்கு அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கடந்தாண்டு மட்டும், 3.5 மில்லியன் நீரிழிவு சம்பவங்கள் நாட்டில் பதிவாகியதாக அனைத்துலக நீரிழிவு கூட்டமைப்பு கூறியுள்ளது. அதே சமயம், தற்போது 54 விழுக்காட்டு மலேசியர்கள் உடல் பருமன் பிரச்சனைக்கு ஆளாகியுள்ளதாகவும் தெரிகிறது.