Nov 15

உணவகங்களில் புகை பிடிக்கத் தடை; முடிவில் மாற்றமில்லை!- சுகாதார அமைச்சர்

கோலாலம்பூர்,நவ.15- உணவகங்களில் புகை பிடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்க்கும் எந்தத் தரப்பிடமும் சுகாதார அமைச்சு விட்டுக் கொடுக்கும் போக்கை கடைப்பிடிக்காதென அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சூல்கிப்ளி அகமட் திட்டவட்டமாகக் கூறினார்.


முதியோர், சிறார், மகளிர் என எல்லாத் தரப்பு மக்களின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். புகை பிடிக்கும் சிறுபான்மையோருக்காக இந்த தடையை மீட்டுக்கொள்ள முடியாது என்றார் அவர்.

“உணவகங்கள் உணவு உண்ணும் இடம்தானே? புகை பிடிப்பதற்காகவா உணவகங்கள் செயல்படுகின்றன? அதனால், இந்த விவகாரத்தில் அரசாங்கம் முடிவு எடுத்தது எடுத்ததுதான். அதில் எந்த மாற்றமும் இல்லை” என அமைச்சர் சொன்னார்.

உணவகங்களில் அடுத்தாண்டு தொடங்கி புகை பிடிக்கக் கூடாது என்று அரசாங்கம் அறிவித்ததை அடுத்து கடந்த வாரம் நாட்டிலுள்ள 20,000 -க்கும் மேற்பட்ட உணவக முதலாளிமார்களை உட்படுத்திய மூன்று இயக்கங்கள் அதனை கடுமையாக எதிர்த்து குரல் எழுப்பி இருந்தன.

இந்நிலையில், இத்தகைய எதிர்ப்புக்கெல்லாம் அரசாங்கம் இசைவதாக இல்லை என அமைச்சர் கூறி விட்டார்.